திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்று தமிழ். இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில், தமிழ் முதன்மையாக உள்ளதாக கடந்த 2017 ஆம் ஆண்டில் நடந்த கூகுள் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இது தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெரும் பேறு.
1997 ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, உலகம் முழுவதும் 8 கோடி மக்களால் தமிழ் பேசப்படுகிறது. 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்ட தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாக திகழ்கிறது.
தொன்மையான தமிழ் மொழி, உலகெங்கும் பரவும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்கி அளிப்பவர்களுக்கும், கணினி வழிப் புத்தாக்கச் செயற்பாட்டாளர்களுக்கும் ‘முதலமைச்சர் கணினி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.
வற்றாத படைப்புக்களை உருவாக்கி, தமிழுக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களைத் தமிழ்நாடு என்றுமே தாங்கிப் பிடிக்கத் தவறியதில்லை. தமிழ்த் தொண்டாற்றுவோருக்கு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து வருகிறது தமிழ்நாடு அரசு.
அந்த வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோரை ஊக்குவிப்பதே இந்த விருதின் பிரதான நோக்கம். விருதுத் தொகையாக 2 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
இதுவரை மென்தமிழ் (தமிழ்ச் சொல்லாளர்) (2013), விருபா – வளர்தமிழ் நிகண்டு (2014), விவசாயம் (2015), www.tamilpulavar.org (2016), பிரிபொறி (2017), தமிழ் உரைவழி பேச்சு உருவாக்கி (2018), ‘வாணி’ தமிழ்ப் பிழைத் திருத்தம் (2019), ‘செவ்வியல் இலக்கண – இலக்கியம்’ (2020), வட்டெழுத்து (2021), ‘தமிழ்ப்பேச்சு’ மேம்படுத்திய பதிப்பு (2022) உள்ளிட்ட மென்பொருள்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் நீட்சியாக 2023 ஆம் ஆண்டுக்குரிய ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’க்கு தனிப்பட்ட நபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) அல்லது http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுதவிர, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 31.12.2023 -க்குள் தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 – 28190412, 044 – 28190413 ஆகிய தொலைப்பேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். 31.12.2023-க்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.