Amazing Tamilnadu – Tamil News Updates

முதலமைச்சரின் ஸ்பெயின் பயணத்தில் ரூ. 3,440 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

மிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்றார். இன்று சென்னை திரும்பிய அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது” என்றார். ஸ்பெயின் நாட்டில் பின்வரும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1. ஸ்பெயின் நாட்டின் காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனமான ஆக்சியானா,

2. உயர்தர வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியிலும், பீங்கான் பொருட்கள் உற்பத்தியிலும் உலகின் முன்னணி நிறுவனமான ரோக்கா,

3. கண்டெய்னர் முனையங்கள் மற்றும் சரக்கு பூங்காக்களை அமைப்பதில் சிறந்த நிறுவனமான ஹபக்-லாய்டு,

4. சர்வதேசத் தரத்தில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை அமைக்கக்கூடிய அபர்ட்டிஸ்,

5. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கின்ற கெஸ்டாம்ப்,

6. இரயில்வே சார்ந்த உற்பத்தி தொழிலில் உயர் தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடிய டால்கோ,

7. பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீன கருவிகளை உற்பத்தி செய்கின்ற எடிபான்,

8. உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான மேப்ட்ரீ

ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்ததாகவும், அந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் தங்களுடைய தொழில் திட்டங்களையும் விளக்கி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வத்தையும் தெரிவித்தார்கள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில்…

இந்த முயற்சிகளின் பயனாக, தமிழ்நாட்டில் 3,440 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஹபக் லாய்டு நிறுவனம் – 2500 கோடி ரூபாய் முதலீடு.

எடிபான் நிறுவனம் – 540 கோடி ரூபாய் முதலீடு.

ரோக்கா நிறுவனமும் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்திருக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிறுவனங்கள் மட்டுமில்லாமல், மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக, இந்தியா கருதப்பட்டு வரும் நிலையில், அதில் தமிழ்நாடு முந்திச் செயல்படும் மாநிலமாக முன்னேறி வருவதையும், பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய பல முதலீடுகள், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டி இருக்கிறது என்றார்.

“இது போன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கிறது. தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிகமிக பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இது போன்ற அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


Exit mobile version