மாணவர்களின் வருகைப் பதிவை அதிகரிக்க வைத்த காலை உணவுத் திட்டம்… இட்லி, தோசை தர கோரிக்கை!
அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால், மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநிலத்திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. அரசின் சிறப்புத் திட்டங்களை மதிப்பீடுசெய்வது, பல்வேறு கருப்பொருள்களில் ஆய்வு மேற்கொள்வது மற்றும் மாநிலத்தில் நிலவிவரும் பல்வேறு சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் தகுந்த கொள்கைகளை வடிவமைப்பது உள்ளிட்ட பணிகளை மாநிலத் திட்டக்குழு மேற்கொண்டு வருகிறது.
மாநிலத்திட்டக்குழு ஆய்வறிக்கை
அந்த வகையில், மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள 11 மதிப்பீடு மற்றும் ஆய்வு அறிக்கைகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் சமர்ப்பித்தார். இந்த ஆய்வில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, காலை உணவு திட்டத்தினால் பயன் அடைந்தவர்கள் என்ன சொல்கிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன.
காலை உணவுத் திட்டத்தினால் அதிகரித்த வருகை
அதன்படி, “முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் குழந்தைகள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள். இதனால் பள்ளி மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. பள்ளிக்கு செல்ல மறுக்கும் நிலை தற்போது மாறியுள்ளது. அவர்கள் 9 மணிக்கு பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றால், தற்போது 7.30 மணிக்கே மிகவும் ஆர்வமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் தினசரி வருகை 60 சதவீதத்திலிருந்து 95 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குழந்தைகள் காலை உணவை மிகவும் விரும்பி சாப்பிடுவதாக அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கூறி உள்ளனர். குழந்தைகள் தற்போது வீட்டுக்கு சென்று, ‘பள்ளியில் கொடுப்பது போன்று சாப்பாடு எங்களுக்கு வீட்டிலும் கொடுங்கள்’ என்று கேட்கும் நிலை உள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது” எனத் தெரியவந்துள்ளது.
காலை உணவுக்கு இட்லி, தோசை கேட்கும் மாணவர்கள்
இந்த தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட ஜெயரஞ்சன், “வெளியில் வேலைக்கு செல்லும் தாய்மார்கள், பிள்ளைகள் சாப்பிட்டதா, இல்லையா என்ற கவலை தற்போது தங்களுக்கு இல்லை என்கிறார்கள். காலை உணவு திட்டத்தில் இட்லி, தோசை போன்ற உணவை மாணவர்கள் விரும்பி கேட்கிறார்கள். இது கிராமப்புறங்களில் சாத்தியம் என்றாலும், நகர்ப்புறங்களில் சில நடைமுறை சிக்கல் உள்ளது.
இதுகுறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோன்று மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது 50 சதவீதம் குறைந்துள்ளது” என்ற தகவலையும் தெரிவித்தார்.
இதனிடையே முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் கிடைக்கும் பயனைக் கருத்தில்கொண்டு, வரும் கல்வியாண்டில் (2024-2025) ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு ஏற்கெனவே முடிவு செய்துவிட்டது. இந்த நிலையில், பள்ளிகளை நேரடியாகப் பாா்வையிட்டு அங்குள்ள வசதிகளை உறுதி செய்யுமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாவட்ட கல்வி தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.