‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’… நெகிழ வைக்கும் பலன்கள்!
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’, மாணவர்களின் வருகையை அதிகப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாது, மேலும் பல நெகிழ வைக்கும் பலன்களையும் ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் வருகை அதிகரிப்பு
இந்த திட்டத்தால், கடந்த ஆறு மாதங்களில் மாணவர்களின் வருகை 85% அதிகரித்துள்ளதாக கூறும் சமூக நலத்துறை அதிகாரிகள், “ ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ செயல்படுத்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தபோது 1540 பள்ளிகளில் 1319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
அதன்படி 624 பள்ளிகளில் 0 முதல் 10% மற்றும் 462 பள்ளிகளில் 10 முதல் 20%,171 பள்ளிகளில் 20 முதல் 30% வரையும் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பள்ளிகளையும் அதே பகுதியில் திட்டம் செயல்படுத்தப்படாத பள்ளிகளை ஒப்பிடும் போது 77% மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கின்றனர்.
10 ஆம் வகுப்பு வரை பயனளிக்கிறது
இந்த நிலையில் இந்த திட்டத்தின் பயன், தொடக்கப் பள்ளி மாணவர்களையும் தாண்டி, ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் பயனளிக்கிறது என்ற நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் சிற்றுண்டி உண்ட பின், மீதமிருக்கும் உணவு வீணாவதில்லை; மாறாக, ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில் யார் காலை உணவு சாப்பிடாமல் வந்துள்ளனர் என்பதை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் கண்டறிந்து, அவர்களுக்கு அந்த உணவை வழங்குகின்றனர். இதனால், மீதமாகும் உணவு வீணாகாமல் தடுக்கப்படுவதோடு, ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்களில் பசியோடு இருப்பவர்களும் பயனடைகின்றனர்.
முதலமைச்சர் நெகிழ்ச்சி
இது குறித்த தகவலை, தனது X தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “காலையில் வேலைக்குச் செல்லும் தனது தாயால் சமைக்க முடியவில்லை என்பதால் பசியோடு பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், பள்ளியில் பகிர்ந்தளிக்கப்படும் சிற்றுண்டியை உண்பதாகக் கூறியதைப் படிக்கும்போது நெகிழ்ந்தேன்.
அவரைப் போல, பசியோடு வரும் பல மாணவர்களும் உணவருந்திய பின் வகுப்புக்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்டு, ஒரு நல்ல நோக்கத்தோடு செயல்படுத்தப்படும் திட்டம், மேலும் பற்பல சமூக நன்மைகளுக்கு வித்திடுகிறது நிறைவைத் தருகிறது. உணவை வீணாக்காமல், பகிர்ந்தளிக்கும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
எத்தனைக் கடினமான சூழ்நிலை இருந்தாலும் நம் வருங்காலத் தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற எனது கனவு, கண் முன்னே பலன் தரும்போது ஏற்படும் மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மையினர் பள்ளிகளிலும் விரிவாக்கம்
இந்த நிலையில், இந்த திட்டத்தினால் கிடைக்கும் பலனை கருத்தில்கொண்டு, “கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் ‘காலை உணவு திட்டத்தை’ விரிவாக்கம் செய்வது குறித்து, வரும் நிதி நிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பினால், மேலும் பல ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.