முகமது ஷமி… ‘இது போன்ற ஒரு கம்பேக் எப்போதும் இருக்க முடியாது!’
அது எப்படி ஒருவர் வீசும் அனைத்து பந்தும் விக்கெட் விழும் என எதிர்பாப்பை எகிற வைக்க முடியும் பல விமர்சனம் அவமானங்களை கடந்த தனது தாய் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடி பெருமை சேர்க்க முடியும் மதம் வெறியர்களின் தாக்குதலில் இருந்து எப்படி மீண்டெழுந்து இந்தியாவில் உலகக்கோப்பை கனவை கை அருகில் தொட வைக்க முடிந்தது எப்படி என ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் முகமது ஷமி குறித்து இந்த தொகுப்பில் பார்போம்…
உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் பட்டியலை அறிவித்த உடனேயே அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயம், ‘ முகமது ஷமியை எப்படியும் வெளியே தான் உட்கார வைக்க போகிறார்கள்’ என்று. காரணம், “ஒருநாள் போட்டியில் நம்பர் 1 பந்துவீச்சளராக உள்ள சிராஜ் மற்றும் பும்ரா உள்ளிட்டோர் இருக்கும்போது இந்திய மைதானங்களில் எப்படி ஷமிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும்..?” எனப் பேசி வந்தனர். இருப்பினும் ஷர்துல் தாகூருக்குப் பதிலாக களமிறங்கப்பட்ட முகமது ஷமி , 4 மேட்சை வென்று கொடுத்துள்ளார். பெஞ்சிலே உட்கார வைக்கப்பட்டிருந்த ஷமி, நியூஸிலாந்துடனான லீக் போட்டியில் ஸ்டெம்ப்களை வீலிங் செய்ய வைத்தார்,
இங்கிலாந்துடனான போட்டியில் ஸ்டோக்ஸுக்கு 10 பந்துகளை வீசி குலை நடுங்க வைத்து, நரகத்தின் நுழைவு வாயிலைக் காட்டினார். இலங்கை உடனான போட்டியிலோ, அந்த அணியை எழவே முடியாதவாறு இரக்கமேயின்றி புதைத்தார்! இன்று நியூசிலாந்து உடனான செமி ஃபைனல் போட்டியில் ஒட்டு மொத்த நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களையும் ஒருசேர பெவிலியனுக்கு அனுப்பி வைத்து, இந்திய அணியை ஃபைனலுக்கு அழைத்து சென்று இருக்கிறார்.
‘கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு கம்பேக் எப்போதும் இருக்க முடியாது’ என்று ஒவ்வொரு போட்டியின் போதும் தனது முத்திரையை பதித்துக் கொண்டே வருகிறார் ஷமி.கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில், குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகி ஸ்தானுடன் மோதிய இந்திய அணி, முதல் தோல்வியைச் சந்தி்த்தது.
இந்த தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், முகமது ஷமியை அவதூறாக சமூக ஊகடங்களில் விமர்சித்தனர். முகமது ஷமி குறித்தும் அவரின் குடும்பத்தினர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மோசமாக விமர்சித்தும், முகமது ஷமியை ‘பாகிஸ்தானுக்கு போ…’ என சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வன்மைத்தைக் கக்கினர். ஆனால் இப்பொழுது அதே ஷமியை, ‘எங்களை காக்க வந்த குல சாமி’ என்ற அளவுக்கு அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். இருக்காதா பின்னே..? தனது அடுக்கடுக்கான சாதனைகளையும் இந்த உலகக்கோப்பையில் நிகழ்த்தி வசவாளர்களை வாயடைக்க செய்திருப்பதோடு, வாயார பாராட்டவும் வைத்துள்ளார் முகமது ஷமி…
ஒரு உலகக் கோப்பை போட்டியில் 7 விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர். உலகக் கோப்பை போட்டிகளில் மிக வேகமாக 50 விக்கெட் எடுத்த மிட்சேல் ஸ்டார்க் (19 இன்னிங்ஸ் ) சாதனையை வெறும் 14 இன்னிங்ஸில் எடுத்து முறியடித்துள்ளார். ஒரு உலகக்கோப்பை போட்டிகளில் அதிக 5 விக்கெட் (4 முறை ) எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார் முகமது ஷமி..
ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் முகமது ஷமி வசப்படுத்தி இருக்கிறார். இதற்கு முன்பாக, 2011 ஆம் ஆண்டு 9 ஆட்டங்களில் ஜாகீர்கான் 21 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இன்று இந்தியாவை உலகக்கோப்பைக்கு வெகு அருகில் கூட்டிச் சென்று பார்க்க வைத்த பெருமை முகமது ஷமிக்கும் சேரும். இறுதிப்போட்டி அகமதபாத்தில் நடைபெறுவதால், முகமது ஷமியின் ஆக்ரோஷம் இன்னும் கூடுதலாக இருக்கும். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் அவரது சொந்த மைதானம் அகமதபாத். தற்போது இருக்கும் ஃபார்மையும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தையும் வைத்துப் பார்த்தால், ஷமி மீதான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு இன்னும் எகிறுகிறது..!