மிரட்டும் மழை… நடக்குமா இந்தியா – ஆஸி. மேட்ச்?
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் த்ரிலிங்கே வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டிதான். ஆனா இந்த த்ரிலிங்கை திரிசங்கு நிலைக்கு மாற்றிவிட்டது சென்னையை மிரட்டிக்கொண்டிருக்கும் மழை.
தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சியின் காரணமாக மழை பெய்து வருவதாகவும், மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
எனவே, ஞாயிற்றுக்கிழமை கூட மழை தொடரும் எனத் தெரிகிறது. அப்படி பெய்தால், இந்த உலகக் கோப்பை போட்டியின் மிக முக்கியமான ஒரு ஆட்டமாக கருதப்படும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் பாதிக்கப்படலாம். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்.