‘மிக்ஜாம்’ பேரிடர்: நல்லுள்ளங்கள் உதவலாம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து சென்னை மாநகரம் மெல்ல மெல்ல மீண்டும் வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக அரசு தரப்பில் ஒருபுறம் உதவிகள் வழங்கப்பட்டு வந்தாலும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் தன்னார்வலர்களும் சின்னத்திரை பிரபலங்களும் ஆங்காங்கே உதவி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று விஜய் டிவி பிரபலமான நடிகர் பாலா பண உதவி அளித்துள்ளார். பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளார். இதேபோன்று நடிகர் பார்த்திபனும் சைதாப்பேட்டை பகுதியில் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார்.

மேலும், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. தண்ணீரால் சூழ்ந்துள்ள பகுதிகளில் விஜய் ரசிகர்கள் படகுகளின் மூலம் உணவை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

நடிகர் பாலா

இதேபோன்று மேலும் பல பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிற போதிலும், மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க அரசுக்கு பெரும் நிதி தேவையாக உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ஒன்றிய அரசு தற்போது தமிழகத்துக்கு ரூ.450 கோடி மட்டும் விடுவித்துள்ளது. மத்தியக் குழுவினர் தமிழகம் வந்து வெள்ள சேதங்களைப் பார்வையிட்ட பின்னரே, அடுத்த கட்ட நிதியுதவியை ஒன்றிய அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.

பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத கால ஊதியம்

இந்த நிலையில், இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதன் தொடக்கமாக தன்னுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும், இதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் – நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுமாறு கேட்டு கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே ஏற்பட்டுள்ள பேரிடர்.

இத்தகைய அசாதாரண நேரத்தில் அனைத்துத் தரப்பும் மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நல்லுள்ளங்கள் உதவ வேண்டுகோள்

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது.

எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

எப்படி அனுப்பலாம்?

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரண நிதி எவ்வாறு அனுப்புவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மிக்ஜாம் புயல் பாதிப்பு – ஜிபே, பேடிஎம் மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு tncmprf@iob என்ற ஐடி-மூலம் நிவாரணநிதி அனுப்பலாம். வங்கி இணைய சேவை, கடன் அட்டை மூலம் பணம் அனுப்ப https://cmprf.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பணம் அனுப்பலாம். IOB வங்கியின் தலைமை செயலக கிளை கணக்கு எண் 117201000000070 என்ற எண்ணிற்கும் நிதி அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct, guerre au proche orient : quatre soldats israéliens tués dans une frappe de drones du hezbollah – le monde. Wees de eerste om “thermische versnipperaar maestro land eliet” te beoordelen. Poêle mixte invicta.