“மிக்ஜாம்” புயல் தாக்கியதில் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது மழை பெய்தது. அதிகன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளானது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு நடவடிக்கைகளையும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு அசுர வேகத்தில் செய்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் அரசாங்கத்துடன் இணைந்து தொண்டு நிறுவனங்களும் களத்தில் குதித்துள்ளன. மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான குடும்பத்தினருக்கு உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
அவ்வாறு வரும் நிவாரணப் பொருட்களை, தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கென அரசு அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் , 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.