மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளின் உடல் குறைபாடுகளைக் கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்க, “நலம் நாடி” எனும் புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், தங்களது கல்வியைத் தடை ஏதுமின்றிப் பெற வேண்டும் என்ற அக்கறையில், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு, குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதனைக் களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாணவ மாணவிகளின் உடல் குறைபாடுகளைக் கண்டறிய “நலம் நாடி” எனும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பயிற்றுனர்கள் இச்செயலியைப் பயன்படுத்தி, குறைபாடுகளை எளிதில் கண்டறிய முடியும். மாணவர்களுக்குப் பிறக்கும் போதே ஏற்பட்டுள்ள குறைபாடுகள், வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்கள் போன்ற 21 வகையான குறைபாடுகளுக்கு இச்செயலி மூலம் முழுமையான பரிசோதனை மேற்கொள்ள இயலும்.
அதன் மூலம்,மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவிகளுக்கு கிடைக்க வேண்டிய கல்வி மற்றும் பிற சலுகைகள் அனைத்தும், உரிய தருணத்தில் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.