‘மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் திமுக அரசு!’
அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் நலனையும் நிலைநாட்டுவது என்பது ஓர் அரசு நிர்வாகத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும். இவ்விஷயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமூகத்தில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், அவர்களை கை தூக்கி விடுவதிலும் பல்வேறு முன் மாதிரியான செயல்திட்டங்களைச் செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் என்று பெயரிட்டு, அவர்களுக்கெனத் தனித் துறையையும் உருவாக்கி, விளிம்புநிலை மக்களான அவர்களது வாழ்வில் விளக்கேற்றியது திமுக அரசுதான். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக, அவர்களது நலன் பேணும் அரசாக, அவர்களது உரிமைகளை நிலைநாட்டும் அரசாகச் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு அம்சமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு விழுக்காடு இடஒதுக்கீட்டின்கீழ், அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “ மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளில் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு உலக வங்கி நிதி உதவியுடன் “உரிமைகள் திட்டம்” 1773 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு உட்கோட்ட அளவிலும் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைத்து மறுவாழ்வு நிபுணர்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படும்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
நமது நாடு, ஐக்கிய நாடுகள் சபையில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகளை காப்பதற்கான ஒப்பந்தத்தில் (UNCRPD) கையெழுத்திட்டு இருப்பதின் அடிப்படையில், திமுக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் வரிசையாக பட்டியலிட்டு உரையாற்றினார்.
சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 263 மீட்டர் நீளத்தில் கடல் அருகே வரை மாற்றுத்திறனாளிகள், வயது மூத்தவர்களுக்கான நிரந்தர மரப்பாலம் தமிழக அரசு சார்பில் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்டபோது, அதற்கு பல தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு மேற்கொள்ளும் கொள்கைகள், புதுமையான முயற்சிகள் மற்றும் அவை சார்ந்த செயல் திட்டங்கள் மற்றும் இந்த பிரிவினரின் நலன் மற்றும் உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை மிகுந்த பாராட்டுக்கு உரியவை.
அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் அரசு வகுத்துள்ள பாதை பாராட்டுக்குரியது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு உத்வேகமாக விளங்குகிறது என அறுதியிட்டுக் கூறலாம்!