மழை வெள்ளம்: இணையத்திலேயே விண்ணப்பித்தும் புதிய வாக்காளர் அட்டை பெறலாம்!
சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சமுதாய சான்றிதழ்கள், பள்ளி மற்றும் பட்டதாரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை மீண்டும் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களில் டிசம்பர் 11 ஆம் தேதியிலிருந்தும், சென்னையில் டிசம்பர் 12 ஆம் தேதியிலிருந்தும் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் நாள்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படுகின்றன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தியாகராய நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, பள்ளிக்கரணை உட்பட 46 பகுதி அலுவலகங்களில் இந்த முகாம்கள் ஒரு வார காலத்திற்கு நடைபெறுகின்றன. இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
சிறப்பு முகாம்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை கேட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். சேதமடைந்த சான்றிதழின் நகல் அல்லது விண்ணப்பதாரரின் பெயர், செல்போன் எண், முகவரியை வைத்து அசல் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்கள், ஆதார் அட்டை ஆகியவை விண்ணப்பித்த அன்றே வழங்கப்படுகின்றன.
அதேநேரம், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி 20 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்குள் அவற்றைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘வாக்காள அட்டைக்கு இணையத்திலேயே விண்ணப்பிக்கலாம்‘
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளவர்கள் மழை வெள்ளத்தில் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையைத் தவறவிட்டிருந்தால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம். அவர்களுக்கு விரைவு தபால் மூலம் புதிய வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் ” எனத் தெரிவித்துள்ளார்.