மழை வெள்ளத்தில் மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க…
மிக்ஜாங் புயலால் சென்னை பல பாதிப்புக்களைச் சந்தித்தது. புயல் பாதிப்பில் மிக முக்கியமானது மின்சாரம் தடைப்பட்டதுதான். பொதுவாக மின்விநியோகம் இரண்டு விதங்களில் பாதிக்கும்.
தண்ணீர் காரணமாக மின் நிலையங்களில் எந்திரங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுவது ஒரு வகை. மின் விநியோகத்தில் பிரச்னை இல்லை என்று மின்வாரிய அதிகாரிகள் நினைத்தாலும் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியாத நிலை இருக்கும். அதற்குக் காரணம், அந்தப் பகுதியில் உள்ள மின்வாரிய ட்ரான்ஸ்பார்மர்களைச் சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததால் மின் விநியோகத்தைக் கொடுக்க முடியாமல் இருந்தது.
சோழிங்க நல்லூர் பகுதியில் இருந்த மென்பொருள் நிறுவனங்களுக்கு மின் விநியோகம் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது கிட்ஸ் பூங்காவில் உள்ள தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் துணை மின்நிலையம்தான். 230 கிலோ வாட் திறன் கொண்டது. இந்த மின்நிலையம் நீரில் மூழ்கி 6 நாட்களுக்குப் பின்தான் மீண்டது.
ஏனென்றால், புயல் சென்னையை விட்டுப் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு கூட, துணை மின்நிலையத்தில் ஐந்து அடிவரை தண்ணீர் இருந்தது. கட்டுப்பாட்டு அறையும் வெள்ளத்தில் மூழ்கியது.
இதே போல பெரும்பாக்கத்தில் உள்ள 110கிலோ வாட் துணை மின்நிலையமும் வெள்ளத்தில் மூழ்கியது. மணலியில் உள்ள 230கிவாட் மின்னழுத்தப் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அவற்றைச் சரி செய்ய மின்வாரியத் தொழிலாளர்கள் போராடினார்கள்.
2015 வெள்ளத்தின் போது மின் விநியோகம் சீரடைய ஒரு வாரம் வரையில் ஆனது. இந்த முறை மிக் ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மின் விநியோகம் பெரும்பாலான பகுதிகளில் இரண்டொரு நாளிலேயே சரி செய்யப்பட்டு விட்டது. எனினும் மின் விநியோகத்தில் பாதிப்பை முழுமையாகக் குறைக்கவும் தண்ணீர் தேங்கினாலும் மின்சாரம் பாதிக்கப் படாமல் இருக்கவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
தண்ணீர் பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காண துணை மின்நிலையங்களையும் மின்விநியோக டவர்களையும் தற்போது உள்ள இடங்களில் இருந்து உயரமான இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் தீர்மானித்துள்ளது.
அப்படி படிப்படியாக மாற்றப்பட்டு விட்டால், தண்ணீர் தேங்கினாலும், அவற்றால் பெருமளவுக்கு மின் விநியோக டவர்களோ துணைமின்நிலையங்களோ பாதிக்கப்படாது. எனவே மின் விநியோகத்தில் பெருமளவு பாதிப்பு இருக்காது.