மலேசியாவுக்கு விசா இல்லாமல் பயணம் … தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை?
மலேசியாவில் சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் பல்வேறு காலகட்டங்களில் குடிபெயர்ந்த தமிழர்கள், தற்போது பெரிய தொழிலதிபர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் வேலை நிமித்தம் கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு – மலேசியா இடையிலான உறவு நீண்ட பாரம்பரியம் கொண்டதாகவே திகழ்கிறது.
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இனி விசா இல்லாமல் மலேசியாவிற்கு பயணிக்கலாம் என்றும், இந்த சலுகை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இவ்வாறு வரும் பயணிகள் மலேசியாவில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை தங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு என்னென்ன நன்மைகள்..?
இந்த அறிவிப்பால் இந்தியாவிலிருந்து மலேசியா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இதனால் மலேசியாவுக்கு தான் லாபம். என்றாலும் மலேசியாவில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருவதால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நலன்களோ நன்மைகளோ கிடைக்குமா என்றால், நிச்சயம் ‘ஆம்’ என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..? பார்க்கலாம்…
வழக்கமாக இந்தியாவுக்குள் சுற்றுலா சென்று சலிப்பில் உள்ளவர்கள், இனி விசா செலவின்றியும், அதற்கான மெனக்கிடல்கள் இல்லாமலும் நினைத்த நேரத்தில் மலேசியா செல்ல முடியும். மேலும், மலேசியாவில் தங்கி வேலை செய்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள், இனி எளிதில் மலேசியா சென்று தங்களது உறவுகளைப் பார்த்துவிட்டு வர முடியும்.
பொருளாதார/கல்வி/வேலை வாய்ப்பு பலன்கள்
இன்னொரு பக்கம் விசா இல்லாத பயணம், தமிழ்நாடு மற்றும் மலேசியாவில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே வணிக தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புகளை எளிதாக்கும். இதன் மூலம் தமிழகத்தில் வர்த்தக கூட்டாண்மை, கூட்டு முயற்சிகள் மற்றும் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மேலும், தமிழ்நாட்டிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மலேசிய சந்தையை எளிதாக அணுகுவதன் மூலம் தமிழ்நாட்டின் ஏற்றுமதிக்கு, குறிப்பாக ஜவுளி, கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற துறைகளில் புதிய வர்த்தக மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளுக்கு வழி பிறக்கும். இது ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பதற்கும், தமிழ்நாட்டின் வணிகங்களுக்கான சந்தைப் பன்முகத்தன்மைக்கும் வழிவகுக்கும்.
மேலும், விசா இல்லாத பயணம் தமிழ்நாடு மற்றும் மலேசியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டாண்மைகளையும் ஊக்குவிக்கும். அத்துடன் கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், மாணவர் பரிமாற்ற திட்டங்கள் மற்றும் அறிவுப் பகிர்வு, பல்வேறு துறைகளில் புதுமை மற்றும் முன்னேற்றங்களை வளர்ப்பதற்கும் இது வழிவகுக்கும்.
விசா இல்லாத பயணத்தினால் மலேசியா மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கிடையிலான அதிகரிக்கும் தொடர்பால், கலாச்சார உறவுகள் வலுப்படும். தமிழ் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் போற்றவும் இது ஊக்குவிக்கும். அத்துடன் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள், மொழியைக் கற்கும் முயற்சிகள் மற்றும் மலேசியாவில் தமிழ் விழாக்கள் கொண்டாடப்படுவதற்கும் இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்!