“மன்னிப்பவன் கடவுள்”…. மன்னித்தார் த்ரிஷா!
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த விவகாரம், தேசிய மகளிர் ஆணையம் தலையிடும் அளவுக்கு கடந்த சில தினங்களாக பரபரத்த நிலையில், இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘லியோ’ படத்தில் மன்சூர் அலிகானும் த்ரிஷாவும் நடித்திருந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வெளியாகி மன்சூர் அலிகானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பினர். வழக்கு விசாரணைக்கு மன்சூர் அலிகான் நேற்று ஆஜராகி, தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் இன்று த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரி, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது; தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10-ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!
எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்” என்று முக்கியமாக குறிப்பிட்டிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, த்ரிஷாவும் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் விதமாக, “தவறு செய்பவன் மனிதன்,
மன்னிப்பவன் கடவுள்” (“To err is human,to forgive is divine”) என தனது X தளத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அவரது பதிவுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிலர் கமலின் தேவர் மகன் பட டயலாக்கை நினைவூட்டும் விதமாக, “மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்…” எனப் பதிவிட்டு த்ரிஷாவை பாராட்டி வருகின்றனர்.