தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் விக்ரமன். வானத்தைப் போல, சூரிய வம்சம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழ்நாட்டில் இவரது படங்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவை.
ஆனால் சமீப காலங்களில் விக்ரமன் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், “என்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இதனால் தான் நான் படங்களை இயக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
என்ன ஆனது இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு?
விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா. இவர் நடன இயக்குனர். முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மருத்துவர்கள் செய்த தவறான சிகிச்சையால் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடக்க முடியாமல் ஆகிவிட்டது.
இதுகுறித்த கவலையிலிருந்த விக்ரமன் இந்த விஷயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உதவ வேண்டும் எனத் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (30-10-2023) சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், 15க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் விக்ரமன் வீட்டிற்குச் சென்று அவரது மனைவிக்கு பரிசோதனைகளைச் செய்ய வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் விக்ரமன், “கடந்த 5 வருடங்களாக எனது மனைவி உடம்பு சரி இல்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். அவர் முதுகில் தவறான அறுவை சிகிச்சை செய்ததன் விளைவாக அவரால் நடக்க முடியாது. இந்த நிலைமையை விளக்கி தனியார் யூட்டிப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தேன். அதில், ‘முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு எனது மனைவிக்கு நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தேன்.
அதைப் பார்த்த முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்து விசாரிக்க ஆணையிட்டிருந்தார். இன்று சுகாதாரத்துறை அமைச்சர் என் வீட்டிற்கு வந்து மனைவியைப் பார்த்தார். அவரோடு 15க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் என் மனைவியைப் பரிசோதித்தனர்.
மேலும் நல்ல சிகிச்சை கொடுத்து என் மனைவியை குணப்படுத்தி தருவதாக உறுதி கூறினார்கள். இந்த நேரத்தில் முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அரசு சார்பில் சிகிச்சை:
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரபல திரைப்பட இயக்குனர் விக்ரமன் அவர்களின் சமூக வலைத்தள பதிவை கண்ணுற்ற முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கேற்ப 15 க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களுடன் அவரின் இல்லம் சென்று அவர்தம் துணைவியாருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுத் தொடர் சிகிச்சைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.