மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயரும்?
நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 3 ஆவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனே தொடர்கிறார்.
புதிய நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் அடுத்த மாதம் மத்தியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதாவது மோடி தலைமையிலான புதிய ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கலாகிறது.
நீண்ட நாள் எதிர்பார்ப்பு
இந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட சில சலுகைகளை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்படுகிறது. மேலும், பழைய மற்றும் புதிய வருமான வரி முறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் யாருக்கு எவ்வளவு வரிச் சேமிப்பு?
அப்படி இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டால், சுமார் ரூ.7.6 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.10,400 வரை வரி செலுத்துவது (4 சதவீத சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி உட்பட) குறையும்.
ரூ.50 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு, ரூ.11,440 (செஸ் வரி மற்றும் 10 சதவீத கூடுதல் கட்டணம் உட்பட) மற்றும் ரூ.1 கோடிக்கு மேல் மற்றும் ரூ.2 கோடி வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு, ரூ.11,960 (செஸ் மற்றும் 15-சத கூடுதல் கட்டணம் உட்பட) வரை வரி செலுத்துவதில் குறையும்.
இறுதியாக, 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 13,000 (செஸ் மற்றும் 25 சதவீத கூடுதல் கட்டணம் உட்பட) அளவுக்கு பலன் கிடைக்கும்.
இதர பயன்கள் என்ன?
“புதிய வரி விதிப்பின் கீழ் அடிப்படை வரி விலக்கு வரம்பை ரூ. 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்துவது என்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க நல்ல நடவடிக்கையாகும். இதன் மூலம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள அனைத்து தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கும் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் வரிச் சேமிப்பு கிடைக்கும். 7 லட்சம் வரையிலான வருமானத்தில் ஏற்கனவே வரிச்சலுகை பெறுபவர்களைத் தவிர, இந்த மாற்றம் தனிநபர் செலவழிப்பு வருவாயை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத ஊக்கிகளான செலவினங்கள் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும் உதவும்” என்று நிதித் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், வரி விதிப்பு முறையில் செய்யப்படும் இத்தகைய மாற்றம், குறிப்பாக 87A பிரிவின் கீழ் தள்ளுபடி வரம்பை தாண்டும் மற்றும் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் தனிநபர்களின் அதிக வரி செலுத்துவோர் பிரிவினருக்கும் பயனளிக்கும்.
நுகர்வு அதிகரிக்கும்
அத்துடன் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மானியங்கள் மற்றும் வீணாகும் வாய்ப்புள்ள பிற திட்டங்களுக்கான செலவினங்களை கடுமையாக அதிகரிப்பதற்குப் பதிலாக, தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைக்க மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும் இருக்கும்.
“வரி விகிதக் குறைப்புகள் பொருளாதாரத்தில் நுகர்வு அதிகரிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். அரசின் நலத் திட்டங்களின் பலன் முழுமையாகச் சென்றடையாத சூழ்நிலையில், அரசி இந்த நடவடிக்கை மிகவும் அவசியமான ஒன்றே என்றும் நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் வருகிற ஜூலை மத்தியில் தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட்டில் விடை கிடைத்துவிடும்.