மதுரை ‘எய்ம்ஸ்’ : தொடங்கிய கட்டுமான பணி … முழு வீச்சில் கட்டி முடிக்கப்படுமா?
பல்வேறு அரசியல் சர்ச்சைகள், அரசியல் அழுத்தங்கள், கண்டனங்களுக்குப் பிறகு ஒரு வழியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த கட்டுமான பணி, நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும் கிடப்பில் போடப்படாமல் தொடர்ந்து நடைபெற ஒன்றிய அரசு மனது வைக்க வேண்டும் என்ற ஆதங்கமும் அம்மக்களிடையே காணப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் இருக்கும் அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் என அழைக்கப்படும் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை போன்றே
தமிழ்நாடு உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் அமைக்கப்படும் என கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.
2019 ல் அடிக்கல் நாட்டிய பிரதமர்
இதையடுத்து, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கு அமைக்கலாம் என 5 இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, மதுரை தோப்பூரில் அந்த மருத்துவமனையை அமைக்க 2018 ஜூனில் முடிவானது. இந்த மருத்துவமனை 221 ஏக்கரில், ரூ.1,265 கோடி நிதியில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் எதுவும் தொடங்காத நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரை வந்த பிரதமர் மோடி, 2019 ஆம் ஆண்டு ஜன.27ல் அடிக்கல் நாட்டினார்.
ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கை வசதிகளுடன் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 செவிலியர் படிப்பு (நர்சிங்) இடங்களுடன் இந்த மருத்துவமனை அமையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நாட்டின் மற்றஇடங்களில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக்குழு நிறுவனத்திடம் கடனுதவி பெற்று வழங்கப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
நாட்டின் மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நிதியுதவியை காரணம் காட்டி இழுத்தடிப்பது ஏன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், எய்மஸ் மருத்துவமனை ஒற்றைச் செங்கலுடன் அப்படியே பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதாக கூறி, கையில் செங்கலுடன் பிரசாரம் செய்தது பேசுபொருளானது. அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் அவ்வப்போது இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி வந்தார். அறிவிப்பு வெளியான 2015 ல் இருந்து தற்போது 9 ஆண்டுகளாகி விட்ட நிலையில், சுற்றுச்சுவர் பணி முடிந்த நிலையிலேயே இருப்பது குறித்து பல்வேறு கட்சிகளும் பாஜக அரசை விமர்சித்து வந்தன.
திடீரென தொடங்கிய கட்டுமான பணி
இந்த நிலையில் தான், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் இன்று, எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென தொடங்கின. கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள லார்சன் அண்ட் டூப்ரோ ( L&T) நிறுவனம், வாஸ்து பூஜையுடன் பணிகளை தொடங்கியுள்ளது. கீழ் தளம், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே, இன்னும் 2 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், எதிர்க்கட்சிகள் நிச்சயம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாமல் இருப்பது குறித்து மக்களிடையே பிரசாரம் செய்யும். அது தங்களுக்கு பின்னடைவாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே பாஜக அரசு, அவசர அவசரமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகளைத் தொடங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இது தேர்தலுக்கான நாடகம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் நாடகமா?
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது X வலைதள பக்கத்தில், “ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், “மக்களவையில் எய்ம்ஸ் கட்டுமானப்பணியின் ஒவ்வொரு கட்டமும் எந்தெந்த நேரத்தில் முடிக்கப்படும் என்ற விவரங்கள் (construction bar chart) கேட்டிருந்தோம். ஆனால், அந்த விவரங்கள் தற்போது வரை கொடுக்கப்படவில்லை. அந்த விவரங்கள் கொடுக்காதவரை, மத்திய அரசு தேர்தல் நாடகமாகதான் தற்போது டெண்டர் இறுதி செய்து பணிகள் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது. அதனால், இந்த டெண்டர் இறுதி செய்வதையும் நம்ப முடியாது” என்றும் அவர் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒரு வழியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது குறித்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த கட்டுமான பணி எப்போது முடிவடையும் என்பது குறித்த தெளிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதால், நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும், கடந்த காலத்தை போன்று கிடப்பில் போட்டு விடக்கூடாதே என்ற கவலையும் ஆதங்கமும் அம்மக்களிடையே எழுந்திருப்பதும் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
ஒன்றிய அரசு தான் இதுகுறித்து தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். தெரியப்படுத்துமா?