மணியார்டரில் பறக்கும் மகளிர் உரிமைத் தொகை..!
குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பெற்று பயனடைந்த நிலையில், தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் உரிமைத்தொகை சென்றுசேர்வதோடு, தகுதியுள்ள ஒவ்வொருவரும் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின் பேரில், விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவும், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவியர் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர்.
மேலும் அக்டோபர் மாதத்திற்கான 1,06,48,406 மகளிருக்கான ரூபாய் 1,06,48,406,000/- உரிமைத்தொகையானது, 15 ஆம் தேதி விடுமுறையாக இருந்ததால், ஒரு நாள் முன்னதாகவே அக்டோபர் 14 அன்றே அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகக் கொண்டு சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மாதம் தீபாவளி பண்டிகை 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதை கருத்தில் கொண்டு, விடுபட்டவர்களுக்கு முன்கூட்டியே உரிமைத் தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை பெற அதிகப்படியானோர் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வங்கி கணக்குகளை தொடங்கி இருந்தனர். மேலும் இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87,785 பயனாளிகளுக்கு மணியார்டர் மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தப் பட்டியலில் சிலருக்கு இன்னும் பணம் கிடைக்காமல் உள்ளதாக தகவல் தெரிய வந்ததையடுத்து, அவ்வாறு பணம் போய் சேராமல் விடுபட்டவர்களுக்கு வருகிற 10 ஆம் தேதிக்குள் பணம் கிடைக்கும் வகையில் ரூ.1000 அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.