“தலித்துகள் மீதான தாக்குதலை நிறுத்துக!” – எம்.பி-யாக பதவியேற்றபோது யாருமே எழுப்பாத குரல்… பாஜக-வை அதிரவிட்ட சசிகாந்த் செந்தில்!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி அமைத்துள்ளார் பிரதமர் மோடி. ‘பாஜக 370 இடங்களில் ஜெயிக்கும், ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களைப் பிடிக்கும்’ என்ற பிரதமர் மோடி மற்றும் பாஜக-வின் கனவை, ‘இந்தியா’ கூட்டணி தகர்த்துவிட்டதால், பிரதமராக பதவியேற்றதிலிருந்தே மோடி சுரத்தில்லாமல் தான் காட்சி தருகிறார்.
மறுபுறமோ ‘இந்தியா’ கூட்டணி வட்டாரத்தில் பாஜக-வை மட்டுப்படுத்தி வைத்ததில் உற்சாகம் கரைபுரள்கிறது. அந்த வகையில், இந்த முறை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாக அரங்கேறி இருக்கிறது மக்களவையில் இன்று நடந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சிகளும், அவர்கள் எழுப்பிய முழக்கங்களும்.
18 ஆவது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் தேர்வு செய்யப்பட்டு, அவர் புதிய எம்.பி-க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
எம்.பி-யாக பதவியேற்ற சசிகாந்த் செந்தில்
நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று இரண்டாவது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்ற நிலையில், தமிழக எம்.பி.க்கள் வரிசையாக பதவியேற்றபோது அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் அவையை அதிரவைத்தது.
குறிப்பாக, முதல் நபராக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் பதவியேற்றார்.
அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்ற சசிகாந்த் செந்தில், தனது பதவி ஏற்புக்கான உறுதிமொழியை வாசித்து முடித்தவுடன்,
அதிரவைத்த முழக்கம்
“வாழ்க இவ்வையகம்! வாழ்க தமிழ்! ஜெய் ஜகத்!
தலித்துகள், சிறுபான்மையினர் மீதான வெட்கக்கேடான தாக்குதலை நிறுத்துக!
ஜெய் பீம்… ஜெய் சம்விதான் ( வாழ்க அரசியல் சாசனம் )! ”என்று முழக்கமிட்டார்.
அவர் இவ்வாறு முழக்கமிட்டது பாஜக-வினரை அதிரவைத்தது. உடனே அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
யாருமே எழுப்பாத குரல்
ஆனாலும், அடுத்தடுத்து பதவியேற்க வந்த தமிழக எம்.பி-க்கள் ஒவ்வொருவரும் தங்களது பதவியேற்பின்போது தமிழகத்தின் குரல்களை எதிரொலிக்கும் விதமாக, விதவிதமான முழக்கங்களை எழுப்பினர்.
என்றாலும், இன்று பதவியேற்ற யாருமே இவ்வாறு தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பாத நிலையில், சசிகாந்தின் முழக்கம் நாடாளுமன்றத்தில் தனித்து ஒலித்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.