பொது மக்களிடையே வழக்கமான போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமின்றி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் சென்னை பெருநகர காவல்துறை இடைவிடாது ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ( GCTP), மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்குவதற்காக பள்ளி மண்டலங்களுக்குள் ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்’ என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் போக்குவரத்து தன்னார்வத் தொண்டர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை முறையில் சென்னை நகரில் உள்ள 4 பள்ளிகளில் இந்த திட்டம் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள வித்யோதயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோட், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு ரோந்து மாணவர்களுடன் (RSP) இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 4 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
“இந்த திட்டத்தினால் மாணவர்கள் கல்வி மற்றும் பயிற்சியில் கவனம் செலுத்துவதுடன், போக்குவரத்து விதிகள் மற்றும் சாலைகளைப் பயன்படுத்துவதற்கு உரிய பொறுப்புகளையும் உணர்ந்து கொள்வார்கள்.
போக்குவரத்து விதிகள், போக்குவரத்து விதிமுறைகள் திறன், பாதசாரிகள் பாதுகாப்பு, பாதுகாப்பான சாலையைக் கடத்தல், சைக்கிள் பாதுகாப்பு, போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் சிக்னல்களைப் புரிந்துகொள்வது, பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே காவல் துறையைச் சேர்ந்த முதன்மைப் பயிற்சியாளர்கள் எடுத்துரைப்பார்கள். இதன் மூலம், அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு கிடைக்கும்.
மேலும், பள்ளி வளாகத்தில் உச்ச பள்ளி நேரங்களில் போக்குவரத்து ஒழுங்குமுறை கடமைகள் தவிர, சகாக்கள் மற்றும் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் இந்த தன்னார்வலர்கள் போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவார்கள்” என காவல்துறை தரப்பில் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
இந்த முதல்கட்ட முயற்சி வெற்றி பெற்றவுடன், சென்னை நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை திட்டமிட்டுள்ளது.