Amazing Tamilnadu – Tamil News Updates

‘போருக்குத் தயார்’ என இஸ்ரேல் அறிவிப்பு… பாலஸ்தீனிய ஆயுத குழுக்கள் தாக்குதலினால் பதற்றம்!

பாலஸ்தீனிய ஆயுத குழுக்கள் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்குமிடையே உள்ள காஸா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.

அதே சமயம், ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இதற்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேலை நோக்கி பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. சுமார் 5000 ஏவுகணைகள் வரை ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில், ஒரு பெண் உயிரிழந்துள்ளார் என்றும், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சில குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த திடீர் ஏவுகணைகள் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் போர் நிலை சூழல் உருவாகியுள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. பல்வேறு வழிகளில் இருந்தும் இஸ்ரேலுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதனால் இஸ்ரேலின் தெற்கு மற்றும் மையப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக காஸாவை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய – கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version