தீபாவளி பண்டிகை வருகிறது என்றாலே மக்களிடையே, குறிப்பாக நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடையே குதூகலம் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிடும். போனஸ் பணம் கைக்கு வருவதற்கு முன்னரே, அதை வைத்துக்கொண்டு ‘வீட்டில் யார் யாருக்கு என்னென்ன தேவை, அது பட்ஜெட்டுக்குள் அடங்குமா?’ என்பது குறித்த ஆலோசனைகளும் திட்டமிடல்களும் தொடங்கிவிடும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வருகிற நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் வழங்கும் ஊதியத்துடனோ தங்களது ஊழியர்களுக்கான போனஸை வழங்கும். இப்படி தொழிலாளர்களிடையே குதூகலத்தைக் கொண்டு வரும் ‘போனஸ்’ வழங்கும் இந்த வழக்கம் எப்படி அறிமுகமானது, இதன் சரித்திர பின்னணி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்…
ஆரம்ப காலத்தில் முதலாளிகள் தங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் பணியாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிலேயே ஊதியம் வழங்கி வந்த நிலையில், பண்டிகை நேரத்தில் அதனை கொண்டாடுவதற்காக கொஞ்சம் கூடுதல் பணத்தைக் கொடுத்தனர். அப்படி கொடுக்கப்படும் தொகை எஜமானரின் விருப்பத்துக்கு ஏற்ப இருந்தது. ஆனாலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு அது போதுமானதாக இல்லாததால், படிப்படியாக இது தங்களுக்கு முக்கியம் என்று உணரத் தொடங்கினர்.
“போர் போனஸ்” ( war bonus)
இத்தகைய பின்னணியில்தான், இந்தியாவில் போனஸ் முதன்முறையாக, மில் ஊழியர்களுக்கு 1917 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர்களின் ஊதியத்தில் 10% வழங்கப்பட்டது. அப்போது போர் நடைபெற்றதால், இது “போர் போனஸ்” ( war bonus)என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் அப்போதைய போர் நிலைமைகள் காரணமாக ஊதிய உயர்வுக்கு அனுமதிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்களில் தொழில்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு போனஸ் குறித்த கேள்விதான் முக்கிய காரணமாக இருந்தது. கேரளா மாநிலத்தில் நடந்த கே.எஸ். பாலன் வழக்கு, உரிமையாளர்கள் சங்கத்துக்கு எதிரான ராஷ்ட்ரிய மில் மஸ்தூர் சங்கம் இடையேயான வழக்குகள் போன்ற பிரபலமான வழக்குகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
நாம் மேலே குறிப்பிட்டபடி இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு, தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது 4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.
“அப்படி மாத அடிப்படையில் கணக்கிட்டால், 12 சம்பளம் வரும். ஆனால் ஓர் ஆண்டுக்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியெனில் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமே… 12 தானே கொடுக்கிறார்கள்…” எனக் கருதிய மகாராஷ்ட்ராவில் உள்ள சில மில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக போராட்டத்தை தொடங்கின. தங்களுக்கு ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடின.
ஏன் தீபாவளிக்கு போனஸ் ?
அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லாவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930 ஆம் ஆண்டு வாக்கில் மகாராஷ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின. 10 ஆண்டு காலம் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து அக்கோரிக்கை ஏற்கப்பட்டு 1940 ஆம் ஆண்டு முதல் போனஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில்தான், சுதந்திரத்துக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட 1950 ஆம் ஆண்டு தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற வழக்குகள், போனஸ் பரிந்துரைக்கான ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட முத்தரப்பு ஆணையம் மற்றும் போனஸ் கொடுப்பனவுச் சட்டம் போன்றவற்றினால், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 8.33% போனஸ் வழங்க வேண்டும் என்ற தற்போதைய சட்டம் 1965 ஆம் ஆண்டு மே 29 அன்று நடைமுறைக்கு வந்து, போனஸ் வழங்குவதில் ஒரு ஒழுங்குமுறை உருவானது.