பொறுப்பா இருங்க மக்களே… சென்னையில் 4500 கி.மீ தூரத்திற்கு சாக்கடையில் நிறைந்துள்ள திட கழிவுகள்…

சென்னை போன்று ஒரு பெரிய மாநகரில் குடிநீர் வழங்குவது, கழிவு நீர் அகற்றுவது போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது எப்படி அரசின் அடிப்படையான கடமையோ அதேபோன்று அந்த வசதிகளை அனுபவிக்கும் மக்களுக்கும் சில அடிப்படையான கடமைகள் உள்ளன.

சென்னை மாநகராட்சி சார்பாக தெருவுக்குத் தெரு குப்பை தொட்டிகளை வைத்துவிட்டுச் சென்றாலும் குப்பைகளை சாலைகளில் வீசுவது, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித் தனியாக குப்பை தொட்டிகள் இருந்தாலும் மாற்றி மாற்றி குப்பைகளை வீசி, அந்த பகுதியையே சுகாதார சீர்கேடாக்கும் வகையில் பொறுப்பு இல்லாமல் நடந்துகொண்டு தான் வருகிறார்கள் மக்களில் ஒரு சிலர்.

இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையினால் தான், சென்னை போன்ற நகரங்களில் மழைக்காலங்களில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய அடைப்புகளில் 80 சதவீதம்  திடக் கழிவுகளால் ஏற்படுவதாக அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு போன்ற பகுதிகளில் தற்போதுள்ள சாக்கடை அமைப்பை மேம்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  ஒருபுறம் பாதாள சாக்கடை திட்டங்களை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மறுபுறம் பாதாள சாக்கடைகளில் எந்த அளவிற்கு குப்பை கழிவுகளைப் போட்டு அடைப்புகளை ஏற்படுத்த முடியுயோ அந்த அளவுக்கு மக்கள் அடைப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம் நடத்திய ஆய்வில், சாக்கடை குழாய்களில் சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், மதுபாட்டில்கள், குப்பை, இறைச்சி எலும்புகள் மற்றும் மீன் முட்கள் போன்ற பொருட்களால் பாதாள சாக்கடை கால்வாய்கள் அடிக்கடி அடைக்கப்படுவது தெரிய வந்துள்ளது. இவ்வாறு குவிந்துள்ள கழிவுகளே நகரின் 85 சதவீத கழிவுநீர் அடைப்புகளுக்கும் காரணமாக உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட மண்டலங்களில் இந்த பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், மதுபாட்டில்கள், துணிகள், குப்பைக் கழிவுகள் உள்ளிட்ட பொருட்கள் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் அதிகப்படியாக தேங்கக்கூடிய பொருட்களாக உள்ளன.

இதேபோல், காசிமேடு பகுதிகளில் மீன்பிடி தளங்கள் அதிகமாக உள்ள காரணத்தினால் அந்த பகுதிக்கு உட்பட்ட ராயபுரம், தண்டையார்ப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் போன்ற மண்டலங்களில் பாதாள சாக்கடைகளில் அதிகப்படியான மீன் இறைச்சிகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், 85 சதவீதம் அளவிற்கு அடைப்புகள் ஏற்பட்டு, அந்த அழுத்தத்தினால் கழிவுநீர் சாலைகளின் வழிந்தோடும் நிலை ஏற்படுகிறது.

 மேலும் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை போன்ற குடியிருப்புகள், விடுதிகள் அதிகம் உள்ள பகுதிகளிலும் இந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன.

இந்த அடைப்பு காரணமாக தான் சென்னையில் 4,500 கி.மீ வரை பாதாள சாக்கடைகள் திடக்கழிவுகள் நிறைவந்துள்ளன. அதேபோல் சென்னை மாநகரில் ஒரு நாளைக்கு சராசரியாக 350 கழிவுநீர் அடைப்பு புகார்கள் பதிவாகி வருவதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றினாலெல்லாம் கடைசியில் அதிகம் பாதிக்க்கப்படுவது பொதுமக்கள் தான். காய்ச்சல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடுகிறது.

இதனை தவிர்க்க, பாதாள சாக்கடைகளிலோ அல்லது கழிப்பறைகளிலோ தேவையில்லாத குப்பையை கொட்டாமல் இருந்தால் இந்த பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும்… மேலும் அரசு சார்பிலும் வீடு வீடாக சென்று இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

எனவே, சென்னை மட்டுமல்ல… தமிழகத்தின் எந்த ஒரு நகர்ப்புற பகுதிகளிலும் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால், இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதை தவிர்க்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dprd kota batam. vanderpump rules reunion snark and highlights for 5/24/2023. How to quickly disable ads in windows 11’s start menu.