பொங்கல் ரேஸில் 4 படங்கள்… எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கேப்டன் மில்லர், அயலான்!
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட 4 படங்கள் ரிலீஸாக உள்ளன. கடந்த ஆண்டில், கோலிவுட்டின் இருபெரும் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் விஜய் – அஜித் நடித்த படங்கள் ரிலீஸாகின. ஆனால், இந்த ஆண்டு இல்லை.
இந்த நிலையில், இந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ள படங்கள் எவை, இயக்குநர்கள் யார், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களின் கதைக்களம் என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்…
பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுவதால், அதன் பின்னர் 17 ஆம் தேதி வரை அரசு விடுமுறை தான். மேலும் 13 மற்றும் 14 ( சனி, ஞாயிறு) விடுமுறை தினங்கள் என்பதால், 12 ஆம் தேதி வெளியாகும் பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு 12 ல் தொடங்கி 17 ஆம் தேதி வரை வழக்கமான ரசிகர்களைத் தாண்டி பெண்கள், குழந்தைகளுடன் தியேட்டர்களுக்கு வரும் கூட்டம், குடும்பம் குடும்பமாக இருக்கும். இதனால், இந்த பொங்கல் விடுமுறைக்கு நல்ல கலெக்சன் கிடைக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ள 4 படங்கள் குறித்த அலசலை பார்க்கலாம்…
மேரி கிறிஸ்துமஸ் (Merry Christmas)
விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை ரிலீஸாகிறது. இந்த படத்தை ‘அந்தாதூன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இவரின் படங்களில் இடம் பெறும் த்ரில்லர் மற்றும் டார்க் காமெடிகள், இந்த படத்திலும் இடம்பெறும் எனத் தெரிகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். ப்ரீதம் இசையமைத்துள்ளார். இந்தி பதிப்பில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன் மற்றும் தின்னு ஆனந்த் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அதுவே தமிழில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ராதிகா ஆப்தே மற்றும் அஷ்வினி கல்சேகர் இந்தி, தமிழ் மொழி படங்களில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
பலதரப்பட்ட வேடங்களில் ரசிகர்களை கவர்ந்த கத்ரீனா, சமீபத்தில் டைகர் 3 படத்தில் ஆக்ஷன் ஜானரில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதே போல் கடந்தாண்டு ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி முதன்முதலாக ஹீரோவாக ‘மேரி கிறிஸ்மஸ்’ படத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதால், படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.
இந்தி மற்றும் தமிழில் தனித்தனியாக வெளியிடப்பட்ட இந்த படத்தின் ட்ரெய்லர், ஒரு சிக்கலான கதைக்களத்தின் ட்விஸ்டை அவிழ்க்காமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
மிஷன் சாப்டர் 1 (Mission Chapter 1)
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல், அபி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் பொங்கல் ரேஸில் கடைசியாக இணைந்த படம் ஆகும். இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், முதலில் ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டது. ஆனால் ஓடிடி பிசினஸில் இழுபறி ஏற்பட்டதால், கடைசி நேரத்தில் அப்படம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
எனவே, அதற்கு பதிலாக ‘மிஷன் சாப்டர் 1’ படத்தை லைகா களமிறக்கியதாக சொல்லப்படுகிறது. நாளை ரிலீஸாக உள்ள இந்த படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
அயலான் (Ayalaan)
சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து, சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் முதன்முறையாக சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் நடித்துள்ள படம் என்பதாலும், அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இப்படம். சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘அயலான்’ படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நாளை ரிலீஸாக உள்ள இந்த படம் குறித்த பாசிட்டிவான விமர்சனங்கள் இன்றே வரத்தொடங்கி விட்டன. இந்தியாவில் விவசாயத்தை சீரழிக்க வில்லன் கும்பல் ஒரு ஏலியனை பூமிக்கு அனுப்புகிறது. சிவகார்த்திகேயனிடம் தஞ்சமடையும் அது, பின்னர் வில்லன்களின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்ததா என்பது தான் கதையாம்.
முன்னதாக படம் குறித்துப் பேசியிருந்த அதன் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே. ராஜேஷ், “தமிழ் சினிமாவிற்கு ‘அயலான்’ படம் ஒரு மைல் கல் படமாக இருக்கும். தெலுங்கு சினிமாவுக்கு எப்படி ‘பாகுபலி’யோ, கன்னட சினிமாவுக்கு எப்படி ஒரு ‘கேஜிஃஎப்’போ அதேபோல் தமிழ் சினிமாவுக்கு ‘அயலான்’ பெஞ்ச் மார்க்காக இருக்கும். படத்தின் டீட்டெயிலிங் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, ரவிக்குமாரும் அவரது குழுவினரும் நிறைய உழைப்பைக் கொட்டியிருந்தனர். அதன் கூடவே சேர்ந்த VFX தொழில்நுட்பமும் ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளது. படம் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சியிலும், அதன் பின்னணியிலும் வெளிப்படும் டீட்டெயிலிங்கை ரசிகர்கள் நிச்சயம் ரசித்து பாராட்டுவார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு சிறுவர்களிடையே ரசிகர்கள் அதிகம் என்பதால், அவர்கள் நிச்சயம் தங்களது பெற்றோரை தியேட்டர்களுக்கு அழைத்து வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு நல்ல படமும் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் பொங்கலுக்கு ரிலீஸாகும் மற்ற படங்களுடன் எங்களது ‘அயலான்’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும்” என நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.
கேப்டன் மில்லர் (Captain Miller)
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி நிறுவனம், நடிகர் தனுஷை வைத்து தயாரித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர். இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன் என மேலும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படமும் நாளை வெளியாகிறது.
ஆங்கிலேயர்களின் காலனி காலகட்டத்தில் ஒரு கிராமம், பிரிட்டிஷாரின் சுரண்டலை எதிர்த்து நிற்கும் கதைக்களம் தான் ‘கேப்டன் மில்லர்’. தமிழ் சினிமாவில் நீண்ட காலம் யாரும் தொடாத கதையாக, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான படமாக உருவாக்கி உள்ளார் அருண் மாதேஸ்வரன். ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் இயக்கமும் கதை சொல்லும் நேர்த்தியும், இந்த படத்திலும் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் என நம்பிக்கையுடன் கூறும் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், “இந்த படம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாகவும், அது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் பேசும்” என்கிறார்.
இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ‘கில்லர் கில்லர்’ பாடல் வரிகளை கேபர் வாசுகி எழுத, தனுஷ் பாடியுள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்களை ரிலீஸ் செய்தனர். ட்ரெய்லரை பார்க்கும் போது ‘கேப்டன் மில்லர்’ இந்த முறை நிச்சயம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கைக் குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.