பொங்கல் பண்டிகை வருகிற 15 ஆம் தேதி திங்கட்கிழமையன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற வெள்ளிக்கிழமை முதலே தங்களது பயணத்தை தொடங்குவார்கள். ரயில்களில் இருக்கைகள் முன்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், அடுத்து இருக்கும் வாய்ப்பு பேருந்துகள் தான். அந்த வகையில், வழக்கமான பேருந்துகளுடன் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு சிறப்புப் பேருந்துகள் சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையிலிருந்து பொன்னேரி,கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டைமற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டங்களைச் சேர்ந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என்றும் திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12 ஆம் தேதிக்கு முன்பு திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள், கோயம்பேடுக்குப் பதில் கிளாம்பாக்கத்தில் இருந்து உரிய நேரத்தில் பயணம் செய்யலாம்
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர்மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்திலிருந்தும், பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்திலிருந்தும் இயக்கப்படும்.
11 முன்பதிவு மையங்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தலா 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையம் என மொத்த 11 முன்பதிவு மையங்கள் செயல்படும். வருகிற வெள்ளிக்கிழமை, அதாவது 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிவரை காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை இந்த முன்பதிவு மையங்கள் செயல்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொதுமக்களின் வசதிக்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 5 பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறைஅமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சில போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 95.62% பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், மொத்தமுள்ள 16,950 பேருந்துகளில் 16,207 பேருந்துகள் இயங்கி வருவதாகவும் போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.