முடிவுக்கு வரும் பேடிஎம் சேவைகள்… ரிசர்வ் வங்கி தடை விதிப்பு ஏன்?
டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் முன்னணி யுபிஐ நிறுவனமான பேடிஎம்மின் பல்வேறு சேவைகளுக்கு, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
பேடிஎம் வங்கி செயல்பாடுகளை பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இந்த முடக்கம் ஏன், இதனால் எந்தெந்த செயல்பாடுகள் நிறுத்தப்படும் என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே…
பேடிஎம் செயலி மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, கடன் வழங்குதல் உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை சார்ந்த சேவைகளை செய்து வருகிறது பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு, இந்தியா முழுவதும் 30 கோடி வடிக்கையாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் பெருநகரங்கள் தொடங்கி சிறிய கிராமங்கள் வரை அதிகமானோர் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இதில் ஜிபே, பேடிஎம் சேவைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பணம் அனுப்புதல், பெறுதல், ரீசார்ஜ் செய்தல், கடன் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் தான் இதன் பயன்பாடுகள் மிக அதிகமாக தொடங்கி, அப்படியே தொடர்ந்தது.
இந்த நிலையில், பேடிஎம்மின் பல்வேறு சேவைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தடை பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு மேல் எந்த விதமான பேடிஎம் கணக்குகளிலும் பணம் செலுத்துவதற்கோ, வரவு வைப்பதற்கோ அல்லது பணப்பரிவர்த்தனை செய்வதற்கோ தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ஆதார் இணைக்கப்பட்ட பரிவர்த்தனைகள், டெபாசிட் ஏற்றுக்கொள்வது மற்றும் பில் செலுத்துதல் ஆகியவை அனுமதிக்கப்படாது. மேலும், புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள மீதமுள்ள பணத்தை செலவிடலாம்.
குறிப்பாக வாடிக்கையாளர்களின் சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்பு கணக்குகள், சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்ட் டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் மற்றும் பிற சேவைகளில் உள்ள பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பிப்ரவரி 29 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு முன் தொடங்கப்பட்ட பரிவர்த்தனைகளும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் முடித்து அந்நிறுவனம் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுமட்டும் இல்லாமல் மார்ச் 11 ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
கடந்த மார்ச் மாதமே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால், அதன் வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வங்கிசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.