பெரியாருக்கு அரசு மரியாதை… எச்சரித்த அதிகாரி… கருணாநிதி கேட்ட ‘செம’ கேள்வி!
தந்தை பெரியார் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதை தர வேண்டும் என்று அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி முடிவெடுத்தபோது, அது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் ‘மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்’ என எச்சரித்தபோது, அதற்குப் பதிலடியாக கருணாநிதி கேட்ட கேள்வி என்ன என்பதை தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.
தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ‘முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா’ வில் கலந்துகொண்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தொகுத்துள்ள “தாய்வீட்டில் கலைஞர்” என்ற நூலினை வெளியிட்டு ஏற்புரை ஆற்றினார்.
ஸ்டாலின் பேசியபோது, ” திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய நேரத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘திராவிடர் கழகத்துக்கு போட்டியாக அல்ல. அதே கொள்கையை வேறொரு பாணியில் சொல்வதற்காகத்தான். அந்தக் கொள்கையைச் செயல்படுத்திக் காட்டுவதற்காகத்தான்’ என்று மிக தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். தி.க.வும் – தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தி.க.வும் – தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொன்னார் தமிழினத் தலைவர் கலைஞர்.
என்னைப் பொறுத்தவரையில், தி.க.வும் – தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல! உயிரும் உணர்வும் இணைந்து உடல் இயங்குவது போலத்தான் நாம் இந்த இனத்தின் உயர்வுக்காகப் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
‘நான் பள்ளிப் பாடத்தில் தோற்றேன். ஆனால் பெரியாரின் பள்ளிக் கூடத்தில் வெற்றி பெற்றுவிட்டேன்’ என்று பெருமைப்பட்டவர் கலைஞர். “நான் படித்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளிக்கூடம் – காஞ்சிக் கல்லூரி மட்டும்தான்” என்று பெருமையாக – பத்து பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் வாங்கியதைப் போன்ற பெருமையோடு சொன்னவர் கலைஞர்.
யானை தனது குட்டியைப் பழக்கும்போது மிதிக்கும் – அடிக்கும் என்பதைப் போல – பெரியார் எங்களைத் திட்டித் திட்டிப் பழக்கினார் என்று கலைஞர் அவர்கள் சொல்வார்கள். தந்தை பெரியார் மீது தலைவர் கலைஞர் வைத்திருந்த மரியாதை என்பது உணர்வுப்பூர்வமானது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் – பெரியார் அவர்கள் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதை தர வேண்டும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் எடுத்த முடிவு!
“அரசு மரியாதை வழங்க வேண்டும்” என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சொல்கிறார்கள். “அவர் எந்த அரசுப் பதவியிலும் இல்லையே” என்று மூத்த அதிகாரி ஒருவர் சொல்கிறார். உடனே, “காந்திக்கு அரசு மரியாதை கொடுத்தார்களே. அவர் எந்த பதவியில் இருந்தார்?” என்று பட்டென்று கேட்டார் கலைஞர். அதன்பிறகும் அந்த அதிகாரி விடவில்லை. “மாநில அரசு இப்படி ஒரு முடிவெடுத்தால் மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும்” என்று அந்த அதிகாரி சொல்கிறார். “கோபப்பட்டால் என்ன செய்வார்கள்?” என்று முதலமைச்சர் கலைஞர் கேட்கிறார்கள். “ஆட்சியைக் கூடக் கலைக்கலாம்” என்கிறார் அந்த அதிகாரி.
“ஆட்சியைக் கலைக்க இதுதான் காரணமாக இருக்குமானால் இதை விடப் பெருமை எனக்கு எதுவும் கிடையாது” என்கிறார் முதலமைச்சர் கலைஞர். இது ஏதோ அறிவாலயத்தில் நடந்த உரையாடல் அல்ல. கோட்டையில் நடந்த உரையாடல். தமிழ்நாடு அரசின் கோட்டையில் முதலமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்தாலும், தந்தை பெரியார் என்ற கொள்கைக் கோட்டையில் தலைமகனாக இருந்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.
ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்றார் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாடு அரசுதான் பெரியார் – பெரியார்தான் தமிழ்நாடு அரசு என்றார் தலைவர் கலைஞர். நானும் இதனையே வழிமொழிந்து வருகிறேன். உங்களின் பலத்த கரகோஷங்களுக்கிடைய மீண்டும் அதனை வழிமொழிகிறேன்” என்றார்.