பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சென்னை!
முன்னேற்றமும் பாரம்பரியமும் பின்னிப் பிணைந்துள் தமிழக மண்ணில், தொலைநோக்கு பார்வையுடன் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால், பெண்களுக்கான பாதுகாப்பில் இந்தியாவிலேயே சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எப்போதுமே தெளிவான பார்வையுடன் செயல்பட்டு வருகிறார். பெண்களும் குழந்தைகளும் வன்முறை குறித்த அச்சமின்றியும், எவ்வித துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாதவாறும் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுதல், பெண்கள் தங்கும் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களை அமைத்தல், பெண்கள் மற்றும் குழந்தைளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளுதல்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குதல் என பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வை, அவர் செயல்படுத்திய பல்வேறு கொள்கைகள் மற்றும் முயற்சிகளில் பிரதிபலிக்கிறது. இந்தக் கொள்கைகளும் முயற்சிகளும் ஏற்கனவே தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், இதன் அடுத்தகட்டமாக சென்னை கோட்டையில் சமீபத்தில் நடந்த போலீஸ் அதிகாரிகளின் மாநாட்டின்போது போலீசாருக்கு 10 கட்டளைகளைப் பிறப்பித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த 10 கட்டளைகளில் 10 வது கட்டளை பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்டது. அந்த வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள காவலர் செயலியை, இதுவரை 52,262 பேர் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர். இச்செயலி மூலம் 1,397 அழைப்புகள் பெறப்பட்டு, உடனுக்குடன் நேரில் சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என 50,000 பேருக்கு தற்காப்பு கலைகள் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 192 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறார் பாதுகாப்பு பிரிவினர் , 125 பிச்சை எடுத்த சிறார்களை மீட்டுள்ளனர். குழந்தைகள் தடுப்பு பிரிவினர் , காணாமல் போன 339 குழந்தைகளை மீட்டுள்ளனர் என சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகளால், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரம் பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழக்கூடிய நகரமாக மாறி உள்ளது. இதனால்தான் பெண்களுக்கான பாதுகாப்பில் இந்தியாவிலேயே சென்னை மாநகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சென்னை மாநகரம் இவ்விஷயத்தில் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது!