ஈரானைச் சேர்ந்த பெண் உரிமைகள் ஆர்வலர் நர்கஸ் முகமதிக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான அவர் மேற்கொண்ட போராட்டத்திற்காகவும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
51 வயதான நர்கஸ் முகமதி, ஈரானிய அதிகாரிகளால் பல முறை கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் கழித்த போதிலும், அவர் தனது செயல்பாடுகளைக் கைவிடவில்லை. கடந்த ஆண்டு போலீஸ் காவலில் இருந்த 22 வயது பெண்மணி மரணமடைந்ததைத் தொடர்ந்து நடந்த நாடு தழுவிய பெண்கள் தலைமையிலான போராட்டங்களை அவர் முன்னெடுத்துச் சென்றார். அந்த ஆர்ப்பாட்டங்கள் ஈரான் அரசாங்கத்திற்கு மிகுந்த தலைவலியாக மாறியது.
இதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஒஸ்லோவில் பரிசை அறிவித்த நார்வே நோபல் கமிட்டியின் தலைவரான பெரிட் ரெய்ஸ்-ஆன்டர்சன் கூறுகையில், “இந்தப் பரிசு முதன்முதலில் ஈரானில் ஒரு முழு இயக்கத்தின் மறுக்கமுடியாத தலைவரான நர்கஸ் முகமதியின் மிக முக்கியமான பணிக்கான அங்கீகாரமாகும்” எனத் தெரிவித்தார்.