பொது இடங்களில் மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை, பிற மாவட்டங்களோடு ஒப்பிடும் போது மிகவும் அதிகமாகும். எனவே, சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெருநகராட்சி அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பேருந்துகளில் பெண்களிடம் அத்து மீறுபவர்களை உடனடியாக பேருந்தில் இருந்து இறக்கி விடவோ, அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவோ நடத்துனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக, சென்னையில் 1200 பேருந்துகளில் அவசர பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பெண்களுக்கு யாரேனும் தொல்லை கொடுத்தால் உடனடியாக அவர்கள் அந்தப் பொத்தானை அழுத்தலாம். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என அறிந்து கொள்ள சென்னை பெருநகராட்சி சர்வே ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக சர்வே நிறுவனங்களிடம் டெண்டர் கோர இருக்கிறது. பொதுக் கழிப்பிடம், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சந்தைகள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்களுக்குக் கீழ் இருக்கும் காலி இடங்கள், சுரங்கப்பாதைகள் போன்றவற்றில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து அந்த நிறுவனம் ஆய்வு நடத்தும்.
பெண்களிடம் கருத்துக் கேட்டு, அதன் அடிப்படையில் அந்த நிறுவனம் பெண்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளைப் பரிந்துரைக்கும்.
இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை பெருநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும்.