Amazing Tamilnadu – Tamil News Updates

புஷ்ப ராணி: எம்.ஏ. தமிழ் டு கார் மெக்கானிக்!

பொதுவாக ‘கார் மெக்கானிக்’என்றாலே ஆண்களாகத்தான் இருப்பார்கள். அது ஆண்கள் சார்ந்த துறையாகவே பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால், ‘அதெல்லாம் பழைய கதை… இப்போ நாங்களும் காரை அக்கக்கா கழற்றி ரிப்பேர் பார்ப்போம்ல..!” என டஃப் கொடுக்கிறார் இந்த கார் மெக்கானிக் புஷ்ப ராணி.

கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சென்னை வளரவாக்கத்தில் பிஆர் மோட்டார்ஸ் என்கிற பெயரில் மெக்கானிக் ஷெட்டை நடத்தி வரும் புஷ்ப ராணி, திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னைக்கு வந்து டேட்டா என்ட்ரி வேலைப்பார்த்து, அதன் மூலமாக வந்த பணத்தை வைத்து எம்.ஏ. தமிழ் படித்திருக்கிறார். இவருக்குச் சிறு வயதிலிருந்தே எது செய்தாலும் அதை வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருந்துள்ளது. அதன் வழியாக வந்ததுதான் இந்த மெக்கானிக் தொழிலும்.

சரி… மெக்கானிக் தொழிலை எப்படி கற்றுக்கொண்டாராம்? புஷ்ப ராணியே சொல்கிறார், படியுங்கள்…

“ இந்த தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர் சில மெக்கானிக்களிடம் வேலை கற்றுக்கொண்டேன். வேலைக் கற்றுக்கொடுப்பவர்களில் சிலர், ‘நீ ஏன் இத செய்ற? ஒரு பொண்ணால இத எல்லாம் செய்ய முடியாது’ என்று என்னை இழிவு செய்தார்கள். அவர்களால்தான் நான் தற்போது ஒரு மெக்கானிக்-காக உயர்ந்திருக்கிறேன். இந்த தொழிலுக்காகச் செலவு செய்த பணத்தைச் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறேன்” என்கிறார்.

“கைப்பேசியில் வாடிக்கையாளர்கள் பேசும்போது பெரும்பாலானவர்கள் என்னை ‘சார்…’ என்றே அழைப்பார்கள். அப்போதெல்லாம் என் பக்கத்தில் இருப்பவர்களிடம் என்னுடைய குரல் ஆணின் குரல் போல் இருக்கிறதா என்று கேட்பேன். வாடிக்கையாளர்களின் கார் நிற்கும் இடத்திற்கு நான் சென்ற பிறகுதான், ,கைப்பேசியில் பேசியது நீங்களா?’ என்று கேட்பார்கள். நான் ‘ஆம்’ என்று சொல்லி காரில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து கொடுப்பேன். நான் ஒரு பெண்ணாக இருப்பதால் நிறைய வாடிக்கையாளர்கள் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். அது மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது” என்றவரிடம், தோற்ற மாற்றத்திற்கு என்ன காரணம் என்று கேட்டோம்.

“சென்னைக்கு வந்தபோது மற்ற பெண்களைப் போலச் சுடிதார்தான் உடுத்தியிருப்பேன். வேலைக்குச் செல்லும்போதெல்லாம் சில ஆண்கள் தவறான எண்ணத்தில் பார்த்தார்கள். நான் எனது தாய்- தந்தை இருவரையும் அடுத்தடுத்து இழந்ததால், என்னுடைய பாதுகாப்புக்கும் யாரும் இல்லை எனக் கருதி எனது தோற்றத்தை மாற்றிக்கொண்டேன். தற்போது எனது தொழிலுக்கும் இது பொருந்திவிட்டது.

பெண்களால் முடியாதது எதுவும் இல்லை. என்னைப் போல் ஆர்வம் இருக்கிற பல பெண்கள் இந்த துறைக்கு வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை” என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் புஷ்ப ராணி எம்.ஏ. தமிழ்!

Exit mobile version