ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்பு முறை: உங்களுக்கான வருமான வரியில் மாற்றமா?
ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வந்துள்ள நிலையில், பழை வரி விதிப்பு முறை தொடருமா இல்லையா, வருமான வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதிய வரி விதிப்பு முறை தொடர்பாக சில சமூக ஊடகத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது கவனத்துக்கு வந்துள்ளது. உண்மையில் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வரி விதிப்பு முறையில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி விதிப்பு முறையில் மாற்றங்களுக்கான பரிந்துரைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வரி விகித முறையையே வரி செலுத்துவோர் தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். அதாவது பழை வரி விதிப்பு முறை(old tax regime), புதிய வரி விதிப்பு முறை (New tax regime) ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
யார் யாருக்கு எவ்வளவு வருமான வரி?
அதன்படி ரூ. 3 லட்சம் முதல் 6 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5% வரியும், 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை 10% வரியும், 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 15% வரியும், 12 லட்சம் முதல் 15 வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20% வரியும், அதற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30% வரியும் விதிக்கப்படும்.
பழைய வரி முறையை பின்பற்றுபவர்களுக்கு வழங்கப்பட்ட, நிலையான விலக்கு ரூ.50,000, புதிய வரி முறையின் கீழ் வரி செலுத்துபவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூடுதல் வரி விலக்கு பெற முடியும். ரூ. 5 கோடிக்கு மேல் வருமான ஈட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் சர்சார்ஜ் வரி 37 சதவிகிதமாக இருந்த நிலையில், அது இனி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்.
அதேபோன்று 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு வழங்கப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான முதிர்வு தொகையின் மொத்த பிரீமியத் தொகை ரூ.5 லட்சத்தைத் தாண்டினால், அதற்கு வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதைத் தேர்வு செய்வது?
தங்களுக்கு பழைய வரி விதிப்பு முறை பயனளிக்குமா அல்லது புதிய வரி விதிப்பு முறை பயனளிக்குமா என்பதை சிந்தித்து, இரண்டில் ஏதேனும் ஒரு முறையை வரி செலுத்துவோர் தேர்வு செய்யலாம். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வரை , புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு உள்ளது. புதிய வரி விதிப்பு முறையில், வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளன.
வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்புவரி செலுத்துவோருக்கு உள்ளது. வணிக வருமானம் எதுவும் இல்லாத தகுதியான நபர்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்களுக்கு உகந்த வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நிதியாண்டில் புதிய வரி விதிப்பு முறையையும், மற்றொரு நிதியாண்டில் பழைய வரி விதிப்பு முறையையும் வரி செலுத்துவோர் தேர்வு செய்ய முடியும்.