புதிய அனல்மின்நிலையம் கோடை காலப் மின்பற்றாக்குறையைப் போக்குமா?
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் வடசென்னை மிக உய்ய அனல் மின்நிலையம் 3 திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய மின்நிலையத்தைத் திறந்து வைத்திருக்கிறார். இந்த மின்நிலையத்தை அமைக்க 2010ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திட்டமிட்டார். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் 190 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரத்து 158 கோடி மதிப்பீட்டில் இந்த மின்நிலையம் துவக்கப்படுவதற்கான பணிகள் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது.ஆட்சி மாற்றம் காரணமாக தொய்வடைந்திருந்த இந்தப் பணி தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்புக்கு வந்ததும் மீண்டும் வேகமெடுத்தது.
இந்நிலையில் பணிகள் முடிவடைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னை மிக உய்ய அனல்மின்நிலையம் 3ஐ திறந்து வைத்திருக்கிறார். இந்த மின்நிலையத்தின் சிறப்பு என்னவெனில் இது மிக உய்ய அனல்மின்நிலையம். ஆங்கிலத்தில் சூப்பர் கிரிட்டிக்கல் தெர்மல் பவர் என்பார்கள். வழக்கமான அனல்மின்நிலையங்களில் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு இந்த மின்நிலையத்தில் மிகவும் குறைவாக இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இந்த அனல்மின்நிலையத்தில் 45 கிராம் நிலக்கரி மட்டுமே தேவைப்படும்.
இதனால் கார்பன் உமிழ்வு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையில் குறையும். சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாத இந்த அனல்மின்நிலையம் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான திறன் படைத்ததாகும்.இந்தப் புதிய மின்நிலையம் தமிழ்நாட்டின் கோடைகால மின்பற்றாக்குறையை ஈடு செய்ய பெருமளவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தமிழ்நாட்டின் மின்தேவை கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 70 சதவீத்தை அனல்மின்நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன.தற்போது தூத்துக்குடி அனல்மின்நிலையம், மேட்டூர் அனல்மின்நிலையம் ஒன்று மற்றும் இரண்டு, வடசென்னை அனல்மின்நிலையம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய மின்நிலையங்களில் இருந்து 4320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
இந்த நிலையில் தற்போது முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள வடசென்னை மிக உய்ய அனல்மின்நிலையத்தின் உற்பத்தித் திறன் 800 மெகாவாட் ஆகும். இதனுடன் சேர்த்து தமிழ்நாட்டின் அனல்மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் மொத்தமாக 5120 மெகாவாட் ஆகும். வழக்கமாக கோடை காலத்தில் ஏற்படும் அதிக மின்தேவைக்கு மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் தவிர்த்து வெளிச்சந்தையில் மின்கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது மாநிலத்தின் மின்உற்பத்தித் திறன் புதிய மின்நிலையம் மூலம் அதிகரித்துள்ளதால், வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்தின் அளவு குறையும் எனவும் இதனால் மின்வாரியத்தின் நிதி நிலை மேம்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.