“பிச்சை புகினும் கற்கை நன்றே”- ‘கதை’ மட்டும் சொன்னா போதுமா ‘பவா’?

‘கதை சொல்லி பவா’ இத்தனை சீக்கிரமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது யாருமே எதிர்பாராத ஒன்றுதான்.

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் ‘கண்ட இடத்திலும் எச்சில் துப்புகிறார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ‘அந்த பழக்கத்தை மாத்திக்கோங்க’ என சக போட்டியாளர்கள் சொன்னபோது, ‘அப்படியெல்லாம் சட்டுனு ஒரே நாள்ல மாத்திக்க முடியாது’ என பவா சொன்னதை வைத்தும் சர்ச்சைகள் கிளம்பின. ஆனால், ‘ இதெல்லாம் முன்கூட்டியே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டாகவும் இருக்கலாம்’ என்ற பேச்சும் ஒருபுறம் எழுந்தது.

இந்த நிலையில்தான், “கல்வி என்பது ஒரு மண்ணும் கிடையாது” என பிக் பாஸ் வீட்டுக்குள் பவா சொன்னதுதான் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி, அவருக்கு எதிராக மட்டுமல்லாது நிகழ்ச்சியை நடத்தும் விஜய் தொலைக்காட்சி மற்றும் பிக் பாஸ் தொகுப்பாளர் கமலுக்கும் எதிராக கண்டனக் குரல்களை எழ வைத்தன.

சல்லி சல்லியாக நொறுங்கிப் போன இலக்கிய முகம்

படிப்பு குறித்த அவரது சர்ச்சை பேச்சினால் எழுந்த கடுமையான விவாதங்களினால், சமூக வலைத்தளங்களில் அவரை வைத்து வெளுத்துக்கட்டிவிட்டனர். இதனால், “மேடை மேடையாக அவர் கதை சொல்லி, வாழ்நாள் முழுவதும் அவர் கட்டமைத்து வைத்த ‘கதை சொல்லி’ முகமும் இலக்கிய முகமும் சல்லி சல்லியாக நொறுங்கிப் போனது என்றே சொல்லலாம்.

பவா செல்லத்துரை, ஜோவிகா, விசித்ரா

இது குறித்த தகவல் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்க வேண்டும் அல்லது பிக் பாஸே அவரை வெளியேறச் சொன்னாரோ என்னவோ, “ தொடர்ந்து இங்கு இருந்து டாஸ்க்குகளைச் செய்ய என் உடலும் ஒத்துழைக்காது. எனவே நான் வெளியேறி விடுகிறேன்” என்று கூறி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார் எழுத்தாளர் பவா செல்லதுரை.

பிக்பாஸ் போட்டி 2017 ம் ஆண்டு தமிழில் ஆரம்பித்த நிலையில், ” சமீபத்திய ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சி இளைய தலைமுறையினரை தவறாக வழிநடத்துவதாகவும் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் சிலர் தீங்கு விளைவிக்கும் அணுகுமுறைகளை ஊக்குவிக்கும் விதமாக பேசிவருவதாகவும்” விமர்சிக்கப்பட்டன.

பவா செல்லதுரைக்கு கசந்த கல்வி

இத்தகைய சூழலில், இந்த போட்டியின் 7-வது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே டாஸ்குகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. களமிறங்கிய 18 போட்டியாளர்களில் விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா, கூல் சுரேஷ் , விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்‌ஷயா உதயகுமார், விகா விஜயகுமார், ஐஷு உள்ளிட்டவர்களில் சிலர் மக்களுக்கு பரிச்சயமான முகங்களாகவும் சிலர் சினிமா துறையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போட்டியாளர்களாகவும் காணப்பட்டனர். போட்டி ஆரம்பித்த இரண்டாம் நாள், வீட்டின் கேப்டனை ஈர்க்க தவறியதால் 6 பேரை ‘ஸ்மால் பாஸ்’ இல்லத்திற்கு அனுப்பினர். இதையடுத்து இப்போட்டியை இன்னும் சூடு பிடிக்க வைக்கும் வகையில் அடுத்தடுத்த டாஸ்க்குகள் அமைக்கப்பட்டன.

கடந்த வாரம், நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான நடிகை விசித்ரா, இன்னொரு போட்டியாளரான ஜோவிகாவை பார்த்து, “ எங்கே தமிழ் எழுதிக்காட்டு பார்ப்போம்” என்று கேட்க, அதற்கு ஜோவிகா, “நான் தமிழ் படிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சம் எழுத தெரியும். எனக்கு படிப்பு வரவில்லை என்றுதானே அதை நிப்பாட்டினேன். படித்துதான் வாழவேண்டும் என்று எதுவுமே கிடையாது” என்று ஆவேசமாக பேசினார்.

அப்போது எழுத்தாளர் பவா செல்லத்துரை வாய் திறந்ததுதான், அவருக்கு வினையாக அமைந்தது. ஜோவிகாவுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து, “கல்வி என்பது ஒரு மண்ணும் கிடையாதுங்க” என்று கூறிக் கொண்டே, கூல் சுரேஷைப் பார்த்து, ” சுரேஷ் நீங்கதான் சொன்னீங்க. பத்தாவது படிச்சிருக்கேனு. இங்கிருக்கிறவங்களை விட உங்களுக்குத்தான் புகழ் அதிகம். எப்படி வந்தது? உங்க கல்வியாலா?. ஏன், M.Phil,Ph.D-க்கு வர்ல” என்று பேசினார்.

வெளுத்துக்கட்டிய சமூக வலைத்தள வாசிகள்

அவரது இந்த பேச்சின் வீடியோ க்ளிப் சமூக வலைதளங்களில் பரவ, ” இந்த வகையான பேச்சுகளெல்லாம் ‘ படிப்பு வர்லையா… ஆடு, மாடு மேய்க்கப்போ… உனக்கு படிக்க பிடிக்கலையா… ஊர் சுத்ததான் பிடிக்குமா… இந்த டூரிஸ்ட் கைடாகிடு… உனக்கு லட்ச ரூபாய்’ சம்பளம்’, ‘ சச்சின் என்ன படிச்சாரு… பத்தாவதுதானே… ஆனா அவர் ‘ஒலக பேமஸ்’ ஆகலயா…?’ என ‘சங்கி’களின் நச்சு கருத்துகளை நாசூக்காக விதைக்கும் சீமான் ரக பேச்சுகள் எனச் சொல்லி, அது தொடர்பான வீடியோக்களை போட்டு பவாவை வைத்து வெளுத்துக்கட்டினர். கூடவே போறபோக்கில் எழுத்தாளர் ‘ஜெய மோகனும் இப்படியானவர்தான்’ எனச் சொல்லி அண்ணா ஹசாரேவைப் புகழ்ந்து அவர் எழுதிய புத்தகத்தைச் சுட்டிக்காட்டி அவரும் வறுத்தெடுக்கப்பட்டார்.

சீமான் – கோபிநாத்

அதே சமயம், ‘படிக்கிறதை மட்டும் எக்காரணத்தைக்கொண்டும் விட்டுவிடாதே’ என்ற கருத்துக்கு ஆதரவாக ‘அசுரன்’ படத்தில் தனுஷ் பேசிய வசனம் தொடங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சுகளின் ‘கார்டுகள்’, நீயா நானா கோபி, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மேடைகளில் பேசிய வீடியோ க்ளிப்புகளும் ரவுண்டில் வந்தன. அதிலும் ‘ காமராஜர் படிச்சாரா… சச்சின் படிச்சாரா… என ஒரு 10 பேரைச் சொல்வாங்க… 11-வது நபரா யாரைச் சொல்வாங்க… ஆனா நான் படிச்சதால முன்னேறிய, சாதித்த பல லட்சம் பேரை சொல்லட்டா..?” எனப் பேசும் வீடியோ செம வைரல் ஆனது.

கல்வி என்பது ஒரு மனிதனின் அறிவு மட்டுமல்ல, அவனது ஒழுக்கம், உடல், மனது மற்றும் சமுதாய மதிப்பு, இவை அனைத்தையும் உயர்த்தும், அவனை பண்பட வைக்கும். கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள ஒரு மனிதனாக மாற்றுகிறது.

“பிச்சை புகினும் கற்கை நன்றே”

அதனால்தான், ‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற பாடிய ஒளவையாரே கூட, கல்வி கற்பதன் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு “கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று கூறிவிட்டுச் சென்றார்.

திருவள்ளுவர் – ஒளவையார்

அவரைப்போன்றே வள்ளுவர் பெருமகனும், கல்வியின் அவசியம் குறித்து எழுதியுள்ள குறள்கள் அநேகம். பிறர்க்கு கொடுக்க, கொடுக்க குறையாதது என்பது கல்வி ஒன்றே! இதனைக் கற்கக் கற்க அறிவு விரிவடையும். இதனால்தான் வள்ளுவர்

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு

-என்றார்.

மேலும், கல்வி ஒன்றே ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம். அதைத்தான் வள்ளுவர்,

கேடுஇல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றையவை

-என்ற குறள் மூலம் தமிழ்ச் சமூகத்துக்குச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதும் இந்த வகையில் வருவதுதான். தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்க்கையிலும் கல்வி குறித்து மிகுதியாக பேசப்படுதல் மூலமே, கல்வி மீது நம் முன்னோர் எத்தகைய மதிப்பு கொண்டிருந்தனர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம் முன்னோர் போட்ட அந்தப்பாதையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த, ஆட்சியில் தற்போது இருக்கிற அரசுகளெல்லாம் நடைபோடுவதால்தான், உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மட்டும் இல்லாமல், மத்திய அரசு நிர்ணயித்த இலக்கையும் தாண்டி, பல்வேறு முன்னேறிய உலக நாடுகளுடன் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் பவா செல்லத்துரை போன்றவர்களுக்கு தெரியாதது அல்ல. எனவே, ‘எல்லாரும் படிச்சு டாக்டராகிட்டா யார் கம்பவுண்டாராவது..?’ என தமிழ்ச் சமூகத்தை மழுங்கடிக்க நினைப்பவர்களிடம் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct, guerre au proche orient : quatre soldats israéliens tués dans une frappe de drones du hezbollah. Husqvarna 135 mark ii. Integer neque ante, feugiat ac tellus a, tristique tempus dolor.