பறிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகள்… ஓங்கி ஒலித்த உதயநிதியின் குரல்!
தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி எண்ணிக்கையை குறைக்கும் திட்டம், நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, தமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்க முடியாது என்ற உத்தரவு, தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வில் காட்டும் பாரபட்சம், ஆளுநர்கள் மூலம் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது என ஒன்றிய அரசின் எதேச்சதிகார போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஜனநாயக விழுமியங்களையும் மாநில உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், ஒன்றிய அரசை நோக்கி மிக ஆவேசமாக குரல் எழுப்பி உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதற்கான போராட்ட களத்தில் திமுக முன்னணியில் நிற்கும் என அறிவித்துள்ளார்.
‘ஏபிபி ( abp) ஊடக நெட்ஒர்க்’ ஏற்பாடு செய்திருந்த ‘தி சதர்ன் ரைசிங் உச்சிமாநாடு 2023’ – (TheSouthernRisingSummit2023) சென்னையில் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.
அந்த வகையில், திமுக சார்பில் பங்கேற்று உரையாற்றிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநில உரிமைகளை வலியுறுத்தியதோடு, மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப ‘தொகுதிகள் மறுவரையறை’ என்ற பெயரில் ஒன்றிய அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான எம்.பி-க்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதையும் கடுமையாக சாடினார்.
தொகுதி சீரமைப்பும் தமிழ்நாட்டிற்கான பாதிப்பும்
மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்ட 1975 -ம் ஆண்டின்போது, தொகுதி சீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என அப்போது செய்யப்பட்ட சட்டத்திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலம் இதனால் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
2001-ல் இந்த 25 ஆண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, தங்களுக்கான தொகுதிகள் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற அச்சத்தில், பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அப்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2002-ம் ஆண்டு, அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 84-வது திருத்தத்தின் மூலம், தொகுதி மறுசீரமைப்பு 2026-ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதாவது ‘தொகுதிகள் மறுவரையறை’ செய்வதற்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கும் மேல் கால அவகாசம் உள்ளது.
அப்படி இருக்கையில், தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்துவதில் ஒன்றிய அரசு இப்போதே ஆர்வம் காட்டுகிறது. அப்படி அது செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள், மக்களவையில் தங்களுக்கான எண்ணிக்கையை இழக்க நேரிடும். தமிழ்நாட்டின் எண்ணிக்கை 39-லிருந்து 31 ஆக குறையும்.
‘தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டால் தண்டனையா?’
மேலும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தென் மாநிலங்களை அடக்கி, அவற்றின் உரிமைகளுக்கான குரல் எழுப்புவதை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இவற்றையெல்லாம் தனது உரையில் குறிப்பிட்ட அமைச்சர் உதயநிதி, ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் மாநில உரிமைகளை மதிக்கும் அனைவரும் இந்த அநியாயத்துக்கு எதிராக ஒன்றுபடுவது மிகவும் முக்கியமானது என்றும், மாநில உரிமைகளுக்காக போராடும் அரசியல் கட்சிகள் இதை எதிர்த்து குரல் கொடுக்கும் என்று தாம் நம்புவதாகவும், இதற்கான போராட்டக் களத்தில் திமுக முன்னணியில் நிற்கும் என்றும் உறுதிபடக் கூறினார்.
ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த உதயநிதி ஸ்டாலினின் இந்த கவலைகள் மிகவும் நியாயமானவை.
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதற்காக தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
இப்படி சிறப்பாக செயல்பட்டதற்காக தென் மாநிலங்கள் தண்டிக்கப்படுவது மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்துடன் மட்டும் நிற்காமல், மருத்துவ படிப்பு மற்றும் மருத்துவ கட்டமைப்புகளில் சிறப்பாக செயல்பட்டது, ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாய் ஈட்டிக் கொடுத்தது எனப் பல விஷயங்களில் சிறப்பான செயல்பாட்டுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தண்டிக்கப்படும் போக்கு காணப்படுகிறது.
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்குத் தடை
ஏற்கெனவே ‘நீட்’ தேர்வு மூலம் மாநிலங்களுக்கான கல்வி உரிமையில் ஒன்றிய அரசு தலையிட்ட நிலையில், தற்போது, தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி, தமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்குவதோ, ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
“ ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ 10 லட்சம் பேருக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் என்ற விதிக்கு அந்த மருத்துவக் கல்லூரி பொருந்தியிருக்க வேண்டும்” என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி, தற்போது தமிழ்நாட்டில் சுமார் 8,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் வரை இருக்கலாம். ஆனால், அந்த எண்ணிக்கை 8,500- ஐ தாண்டிவிட்டது. ஆகவே, தமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்குவதோ, ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இனிமேல் இடங்களை அதிகரிக்கவோ முடியாது.
இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட அமைச்சர் உதயநிதி, “தனது மாநில மக்களுக்கு நல்ல மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும், மருத்துவ படிப்பை படிக்க விரும்பும் தனது மாநில மாணவர்கள் உரிய வாய்ப்புகளைப் பெற்றிடும் வகையில் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்க வேண்டும் என ஒரு மாநிலம் கருதுவது குற்றமா..?” எனக் கேள்வி எழுப்பியதோடு, வரிப் பகிர்வில் காணப்படும் பாரபட்சத்தையும் சுட்டிக்காட்டினார்.
வரிப் பகிர்விலும் பாரபட்சம்
“ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாயைக் கொடுப்பது தென் மாநிலங்கள்தான். ஆனால் அங்கிருந்து கிடைப்பது மிகக் குறைந்த பங்களிப்பே. ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 காசுகள் மட்டுமே திரும்ப கிடைக்கிறது. 2014-ம் ஆண்டிலிருந்து ஒன்றிய அரசுக்கு 5 லட்சம் கோடிரூபாய் வரி வருவாயாக கொடுத்துள்ளது. ஆனால், இந்த ஒன்பது ஆண்டுகளில் 2 லட்சம் கோடி மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. அதே சமயம் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் 2 லட்சம் கோடி கொடுத்துவிட்டு, 9 லட்சம் கோடியை திரும்ப பெற்றுள்ளது” என்று குறிப்பிட்ட அவர், இது சிறப்பாக செயல்பட்டதற்காக தென் மாநிலங்களைத் தண்டிக்கும் மிகப்பெரிய சதி என்றும் குற்றம் சாட்டினார்.
ஒன்றிய அரசின் இதுபோன்ற நியாயமற்ற நடவடிக்கைகளும், மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் மாற்றாந்தாய் போக்குடன் நடந்து கொள்வதும், தங்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூலம் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுத்து மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் நிலுவையில் வைத்து அரசு நிர்வாகத்தை முடக்குவதும் அதன் எதேச்சதிகார, நாட்டின் ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்கும் செயல்களாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு காரணமான கலைஞரின் திட்டங்கள்
இவற்றையெல்லாம் தனது பேச்சில் குறிப்பிட்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த ஸ்டாலின், “சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய மாநிலங்கள் பெரும்பாலானவை ஒரே நிலையில்தான் இருந்தன. எல்லா மாநிலத்துக்கும், ஒரே மாதிரியான வாய்ப்புகள்தான் இருந்தது. ஆனால், தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு இந்தளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்றால், இங்கு நிகழ்ந்த சமூக, பொருளாதார புரட்சிதான் அதற்கு காரணம்” என்று குறிப்பிட்டு, அதற்கு காரணமான திராவிட கோட்பாட்டு அரசியலும் அதனை செயல்படுத்திய திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களும்தான் காரணம்” என்றார்.
அதற்கு உதாரணமாக “ உழுதவருக்கே நிலம் சொந்தம் என்ற நில உச்சவரம்பு சட்டம், உணவு உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கும், கட்டணமின்றியும் அனைருக்கும் கொண்டு சேர்த்தது, இந்தியாவுக்கே முன் மாதிரியான உணவு கொள்முதல் மற்றும் வினியோக அமைப்பான Tamil Nadu Civil Supplies Corporation ஐ ஏற்படுத்தி தமிழ்நாட்டின் பொது விநியோக முறையை வலிமையாக்கியது” போன்றவற்றை அவர் குறிப்பிட்டார்.
உதயநிதி விடுத்த அழைப்பு
அடுத்ததாக, “ஊடகங்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது. உங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
“ மக்களிடம் செல்லுங்கள் அவர்களிடையே வாழுங்கள் அவர்களிடமிருந்து கற்றறியுங்கள் அவர்களை நேசியுங்கள் அவர்களுக்காகப் பணியாற்றுங்கள் அவர்களோடு அமர்ந்து திட்டமிடுங்கள் அவர்கள் அறிந்ததை கட்டமையுங்கள்” என்று திமுக-வினருக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணா கூறிவிட்டுச் சென்ற புகழ்மிக்க வார்த்தைகளைக் குறிப்பிட்டு, அதைத்தான் நமது மாண்புமிகு முதலமைச்சர் பின்பற்றி நடப்பதாகவும் கூறிய அமைச்சர் உதயநிதி, வடக்கில் உள்ள ஊடகங்கள் தேசத்தின் நலன் கருதி, தமிழ்நாட்டைப் பற்றிய அவர்களின் தவறான கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டு ஜனநாயகபூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு, தமிழ்நாடு, முக்கியமாக திமுக மற்றும் தமிழ்நாட்டின் மக்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பார்கள் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
‘தி சதர்ன் ரைசிங்’ உச்சிமாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஆற்றிய உரை, வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்கொள்வது, ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பது மற்றும் மாநில உரிமைகள் பற்றிய அழுத்தமான பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளது.
மேலும் நியாயம், சமத்துவம், ஜனநாயகம் ஆகிய கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படாமல், மாநில உரிமைகள் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைக்கான அழைப்பாகவும் உள்ளது. எனவே இதை அரசியல் சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டுமே பார்க்காமல், நமது ஜனநாயகத்தின் அடிநாதத்தைப் பாதுகாக்க வேண்டிய விஷயமாக கருதி சம்பந்தப்பட்ட கட்சிகள், குறிப்பாக மாநில கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டும்!