பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் என்ன ஸ்பெஷல்?
தமிழ்நாட்டில் சென்னை புத்தகக் காட்சி மிகவும் பிரபலம். 46 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. இப்போது 47 ஆவது புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்ற ஆண்டில் இருந்து பன்னாட்டுப் புத்தகக் காட்சியும் நடக்கிறது. இந்த புத்தகக் காட்சியில், வெளிநாட்டுப் பதிப்பகங்களுடன் நமது தமிழ்நாட்டில் உள்ள பதிப்பகங்கள், அவர்களின் புத்தகங்களைத் தமிழுக்குக் கொண்டு வரவும், அதே போல தமிழ்ப் புத்தகங்களை வெளிநாட்டுப் பதிப்பகங்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கவுமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன் மூலம் தமிழ் புத்தகங்கள் உலக அரங்கிற்கும், உலகப் புத்தகங்கள் தமிழ் வாசகர்களுக்கும் கிடைப்பதற்கான சூழல் உருவானது.
இந்த ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது. ஆறு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் இந்த பன்னாட்டுப் புத்தகக் காட்சியில், 38 நாடுகள் பங்கேற்க இருக்கின்றன.
சென்னை புத்தகக் காட்சித் தொடக்க விழாவில் வாசிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில், பன்னாட்டுப் புத்தகக் காட்சி பற்றிக் குறிப்பிட்டார். ஆங்கில எழுத்துலகத்தில் இருப்பதைப் போலவே 20 இலக்கிய முகவர்களைப் பயிற்சி கொடுத்து தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கிறது என்றார்.
எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையில் பாலமாக இந்த இலக்கிய முகவர்கள் இருப்பார்கள் என்றும், இந்தியாவில் எந்த மொழிக்கும் இப்படி இலக்கிய முகவர்கள் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஸ்பெஷல் அறிவிப்பு இந்த இலக்கிய முகவர்கள்தான். தமிழ்நாட்டு அரசின் புதிய முயற்சி இது.