நெல்லை மழை வெள்ளம்: காப்பாற்றப்பட்ட 10,000 பேர்… மீட்பர்களாக வந்த மீனவர்கள்!

யற்கை சீற்றங்கள் எப்போதெல்லாம் பேரழிவை ஏற்படுத்தி மக்களை துயரத்துக்குள் தள்ளுகிறதோ அப்போதெல்லாம், சக மனிதர்களின் மனித நேயமும் இரக்க குணமும் தான் ஒருங்கே இணைந்து அந்த மக்களை கரம் நீட்டி காப்பாற்றுகிறது. அப்படியான ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வுதான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி மதியம் வரை பெய்த தொடர் மழையால், மாவட்டத்தின் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானாகள். அரசு தரப்பில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட போதிலும், மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட அரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்தன.

ஆளையே மூழ்கடித்த வெள்ள நீர்

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்காலும், தொடர் மழையாலும், நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகள் மட்டுமல்லாது, கிராமப்புற பகுதிகளிலும் மழை வெள்ளம் புகுந்தது. பல இடங்களில் இடுப்பளவுக்கும், கழுத்தளவுக்கும் மழை வெள்ளம் தேங்கி நின்றது. மேலும் ஆழமான அல்லது பள்ளம் உள்ள பகுதிகளில் ஆளையே மூழ்கடிக்கக்கூடிய அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்திருந்தது.

அதே சமயம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் மாநில அரசு நிர்வாகம் முழு அளவில் களமிறங்கியது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அதிகாரிகள், ஊழியர்கள், களப்பணியாளர்கள் முழு வீச்சில் இறங்கினர். என்றாலும், வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் உடனடியாக செல்வதில் பின்னடைவு ஏற்பட்டது. படகுகளில் சென்று தான் அவர்களை மீட்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. SDRF மற்றும் NDRF குழுவினரிடம் ஓரளவுக்கு இந்த வசதிகள் இருந்தபோதிலும், மேலும் கூடுதலான படகுகளும் அவற்றை செலுத்த தெரிந்தவர்களும் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

தாங்களாகவே முன்வந்த மீனவர்கள்

இது குறித்து அரசு நிர்வாகம் ஆலோசித்துக் கொண்டிருக்கும்போதே, மாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும் மீனவர்கள் தாங்களாகவே மீட்பு பணியில் களம் இறங்க முன்வந்தனர். இத்தனைக்கும் அவர்களது உறவினர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மற்ற பகுதி மக்களைக் காப்பாற்ற அவர்கள் முன்வந்தனர். தொடர்ந்து அரசு நிர்வாகமும் மேலும் பல மீனவர்களைத் திரட்டி மீட்பு பணிக்கு வரவழைத்தது.

நெல்லை மாவட்டத்தின் உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம், தூத்தூர் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து 72 பைபர் படகுகளுடன் 400 மீனவர்கள் வரவழைக்கப்பட்டனர். திங்கட்கிழமை மாலை முதல் களமிறங்கிய இந்த மீனவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளூர் மீனவர் சங்கத் தலைவர்கள் எரிபொருள் மற்றும் போக்குவரத்து வசதிகளைச் செய்துகொடுத்தனர். இது குறித்துப் பேசிய பூத்துறை கிராம திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், “இவ்வாறு மீட்பு பணிக்காக அனுப்பப்பட்டவர்களில் மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அடக்கம்” என்ற தகவலைச் சொல்லி வியக்க வைத்தார்.

மீட்கப்பட்ட 10,000 பேர்

இந்த மீனவர்கள் நெல்லை மாவட்டத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கிய நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிந்து பூந்துறை, சி.என்.கிராமம், குறுக்குத் துறை, நொச்சிக்குளம், முன்னீர்பள்ளம், சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் வெள்ளப்பகுதிகளுக்குச் சென்று, வெளியேற முடியாமல் வீடுகளில் மேல்தளங்களில் தஞ்சம் அடைந்திருந்த சுமார் 10,000 -க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டு, படகுகளில் ஏற்றி முகாம்களில் தங்க வைத்தனர்.

சில இடங்களில் வெள்ள நீரோட்டம் மிக வேகமாக காணப்பட்ட நிலையில், அது குறித்த அச்சம் ஏற்பட்ட போதிலும், கையோடு கொண்டுவந்த மீன்பிடிக்க பயன்படுத்தும் விளக்குகள் போன்ற உபகரணங்களுடன் துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபட்டதாக மீனவர் ஒருங்கிணப்பு சங்க செயலாளர் ஜான்சன் சார்லஸ் தெரிவித்தார். பல இடங்களுக்கு படகை செலுத்தியதில் களைத்துப்போன அவர்களின் ஒரே கவலை, அவர்கள் கொண்டுவந்த படகுகள் குறித்துதான் இருந்ததாக சார்லஸ் மேலும் கூறினார்.

நெல்லையில் மீட்பு பணிகள் முடிவடைந்த உடன், அடுத்தபடியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட கிராமங்களுக்கும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட இந்த மீனவ ஹீரோக்கள், ‘வீரம் என்பது பெரிய சாகசங்களில் ஈடுபடுவது மட்டுமல்ல, சக மனிதர்கள் ஒரு பேரிடரின்போது சந்திக்கும் துயரங்களிலிருந்து அவர்களை மீட்பதும் தான்’ என வீரத்தின் அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளனர் என்றே சொல்லலாம்.

அவர்களின் துணிச்சலைக் கொண்டாடுவோம், அவர்களின் தேவைகளை ஆதரிப்போம், அவர்களது தளராத துணிச்சலிலிருந்து அடுத்தவருக்கு உதவ கற்றுக்கொள்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advantages of local domestic helper. Agência nacional de telecomunicações (anatel) : saiba tudo sobre | listagem de Órgãos | bras. , der installations fachhandel im kölner norden, existiert inzwischen seit über 100 jahren.