‘நீதிபதியின் கருத்து முக்கியமல்ல… தீர்ப்பு தான் பேசும்!’
கடந்த1996 -2001 தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த ஜூன் மாதம் பொன்முடி, அவருடைய மனைவி உள்ளிட்டோரை விடுதலை செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இதேபோல அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்துசெய்து உத்தரவிட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்.
இந்த நிலையில் இந்த வழக்குகளையெல்லாம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரித்துவந்தார். அப்போது இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வசந்த லீலா உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் மீது சில விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நீதிபதி வசந்த லீலா, ‘சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுபோன்ற வேறு சில வழக்குகளிலும் நீதிபதிகள் இவ்வாறு கருத்து வெளியிட்டு, பின்னர் அவை மேல்முறையீட்டில் நீக்கப்பட்ட உதாரணங்கள் உண்டு. நடிகர் விஜய் வெளிநாட்டு கார் வாங்கியதற்கான வரி குறித்த வழக்கிலும், அதனை விசாரித்த நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்து, பின்னர் அது நீக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் இவ்வாறு தனிப்பட்ட கருத்துகளை வெளியிடுவது குறித்து ஏற்கெனவே எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் கிளம்பி உள்ளன. உச்ச நீதிமன்றமும் இது குறித்து கண்டித்துள்ளது. இந்த நிலையில், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், தீர்ப்பைத் தாண்டி இவ்வாறு தங்களது கருத்துகளையோ விமர்சனங்களையோ முன்வைக்கலாமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தாமோவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
அவர் அளித்த பதில்கள் இங்கே…
நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கூறிய கருத்துகளை நீக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி வசந்த லீலாவின் கோரிக்கை சரிதானா?
கோரிக்கை சரிதான். இது நேரடி கோரிக்கை கிடையாது முதலில் அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். அங்கு அனுமதி தரக்கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தீர்ப்பில் தன்னை பற்றி தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ள கருத்துக்களை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் வசந்த லீலா. இது சட்டப்பூர்வமான, சரியான கோரிக்கை ஆகும்.
விசாரணையின் போது நீதிபதிகள் இவ்வாறு தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கலாமா..?
கண்டிப்பாக தெரிவிக்ககூடாது தான்; ஆனால் வழக்கு சம்பந்தமான முற்போக்கான கருத்தாக இருக்கும் பட்சத்தில், அந்த வழக்குக்கு தேவையாகும் பட்சத்தில் கண்டிப்பாக நீதிபதிகள் கருத்து தெரிவிக்கலாம். அதற்காக நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்றால், அது கண்டிப்பாக கூடாது.
எழுத்துபூர்வமாக கூறப்பட்ட தீர்ப்புகளில் கூறப்பட்ட கருத்துகளுக்கும், விசாரணையின் போது வாய்மொழியாக கூறப்பட்ட கருத்துகளுக்கும் வித்தியாசம் உள்ளதா?
கண்டிப்பாக வித்தியாசம் உள்ளது. வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் புரிதல் அவரின் சொந்த கருத்தாக கூட இருக்கலாம். நீதிமன்றத்திலே கூட அவர் தனக்கு இந்த கருத்தில் உடன்பாடு உள்ளது என தெரிவிக்கலாம். இருப்பினும் நீதிபதி தனது தீர்ப்பில் என்ன எழுதி இருக்கிறாரோ, என்ன தீர்ப்பு வழங்கி இருக்கிறாரோ, என்ன வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளனவோ, யாரை பற்றி கருத்துகள் இடம்பெற்று உள்ளனவோ அவைதான் ரொம்ப முக்கியம். நீதிபதியின் புரிதல் என்னவாக இருந்தாலும் அது முழுவதும் அவரின் புரிதல் மட்டுமே.
உங்கள் அனுபவத்தில், விசாரணையின் போது நீதிபதிகள் எத்தனை முறை தேவையற்ற கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்கள், அத்தகைய கருத்துகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
எனது அனுபவத்தில் கூறவேண்டும் என்றால் நீதிபதிகளும் நம்மைபோல மனிதர்கள்தான். நாம்தான் அவர்களை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்துள்ளோம். ஒரு சாதாரண மனிதனிடம் என்ன உணர்வு இருக்குமோ அதுதான் அவர்களிடமும் இருக்கும். சில சமயங்களில் அது வெளிவரும்போது நீதிபதிகள் கருத்து பேசுபொருள் ஆகிறது. தீர்ப்பில் என்ன எழுதி இருக்கிறாரோ அதுதான் இறுதியான முடிவு. மற்றபடி நீதிபதிகள் இதுபோல சாதாரண விஷயத்திற்கு கருத்து தெரிவிப்பது ரொம்ப இயல்பான நிகழ்வாகும்.
இந்தக் கருத்துகள் வழக்கைப் பற்றிய பொதுமக்களின் கருத்தையோ அல்லது மேல்முறையீடுகளின் முடிவையோ பாதிக்குமா?
தீர்ப்பில் இடம்பெறாத நீதிபதிகள் சொல்லும் சாதாரண கருத்துகள் கண்டிப்பாக மேல்முறையீட்டில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. நீதிபதி என்ன தீர்ப்பு வழங்கி இருக்கிறாரோ, அவரின் எழுத்து என்னவாக பேப்பரில் இருக்கிறதோ, அந்த கோப்புதான் மேல்முறையீட்டில் பேசுமே தவிர இது போல சொந்த கருத்து எந்த வகையிலும் மேல்முறையீட்டை பாதிக்காது.
இதுபோன்று விசாரணையில் கருத்து தெரிவிக்கும் போது நீதிபதிகளுக்கு சொல்லப்பட்ட வழிகாட்டுதல்கள் என்ன?
நீதிபதிகளுக்கு என்று கருத்து சொல்ல எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளும் கிடையாது. உயர் நீதிமன்றம் மட்டும் இல்லை உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இருக்கும் ஒரே வழிகாட்டுதல் என்ன என்றால், அது இந்திய அரசியலமைப்பு சட்டம் மட்டுமே. அதனை மீறி யாரும், எந்த ஒரு நீதிபதியோ நீதிமன்றமோ அரசியலமைப்பு சட்டத்தின் மீது அமர்ந்து பேச முடியாது. அதே சமயம் ஒரு சாதாரண மனிதனாக கருத்து தெரிவிப்பது தவிர்க்க முடியாது.
நடிகர்கள் அல்லது அரசியல்வாதிகள் போன்ற பொது நபர்களைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது நீதிபதிகளுக்கான நெறிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் என்ன?
நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு என்று ஸ்பெஷலாக கருத்து சொல்ல வேண்டும், அட்வைஸ் செய்ய வேண்டும் என அவசியம் கிடையாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதைத்தான் நமது சட்டம் சொல்கிறது. சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு இருக்கும் புகழ் மற்றும் பணத்தை வைத்து சட்டத்தை மாற்றி அமைத்துவிட முடியாது. ஒரு சந்தேக மனப்பான்மை வரும்போது நீதிபதிகள் இதுபோல் சொந்த கருத்தைத் தெரிவிப்பது தவிர்க்க முடியாதது.
கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளின் நடத்தையை மேற்பார்வையிடுவதிலும் ஒழுங்குபடுத்துவதிலும், உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்னவாக உள்ளது?
கீழமை நீதிமன்றங்கள், கீழமை நீதிபதிகள் ஒரு வழக்கை உள் ஆய்வு செய்து பார்க்கிறார்களா அல்லது மேலோட்டமாக பார்க்கிறார்களா, அந்த வழக்கை அலசி ஆராய்ந்து பார்க்கிறார்களா, அந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார்களா, வழக்கின் வீரியம் என்ன என்பது குறித்து கீழமை நீதிமன்றங்கள் தான் பார்க்க வேண்டும். ஏன் என்றால் குறுக்கு விசாரணை நடப்பது என்பது உயர்நீதிமன்றத்திலோ , உச்ச நீதிமன்றத்திலோ நடப்பது கிடையாது. அப்படி நடந்தாலும் அது அரிதாகவே நடக்கும். கீழமை நீதிமன்றங்கள் மட்டுமே ஒரு வழக்கின் சாட்சியம் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்து விசாரணை நடத்தும். கீழமை நீதிமன்றங்களை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உன்னிப்பாக கவனிக்கும். அப்படி கீழமை நீதிமன்றம் தவறு செய்யும்பட்சத்தில், அதனை கண்டிக்கும் உரிமை இந்த இரு நீதிமன்றங்களுக்கும் உள்ளது. அப்படி தவறு நடக்காத பட்சத்தில் கீழமை நீதிமன்றம் மீது கருத்து வைப்பது, மக்களுக்கு அதன் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்கும் செயலாக இருக்கும்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் நீதித்துறை கருத்துகள் தொடர்பான பிரச்னையை மற்ற நாடுகள் எவ்வாறு அணுகுகின்றன?
நீதிமன்ற சட்டங்களைப் பொறுத்தவரை, இந்தியாவைத் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் ஒரு வழக்குக்கு ஒரு தலைமை அதிகாரி இருப்பார். அந்த அதிகாரி சட்டத்திற்கு புறம்பான எதையும் தெரிவிக்க மாட்டார் என்பது நீதிபதிக்கு தெரியும். அதுபோலதான் அங்கு வழக்குகள் நீதிமன்றத்தில் நடக்கும்.