Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

‘நீட்’ விலக்கு… உங்களின் கையெழுத்துக்கும் வலிமை உண்டு!

ந்தியாவில் உள்ள மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பில் மிகச்சிறந்த மாநிலம்’ என உலக சுகாதார அமைப்பால் பாராட்டப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. ஆரோக்கியமான சமூகத்தை உறுதிப்படுத்த, 1000 பேருக்கு ஒரு மருத்துவர் வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO)கூறுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரி கணக்கின்படி 1000 பேருக்கு 0.8 மருத்துவர் மட்டுமே இருக்கின்றனர். அமெரிக்காவில் கூட 1000 பேருக்கு 2.6 மருத்துவர்கள் தான் இருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் உள்ளனர்.

மருத்துவக் கல்விக் கட்டமைப்பிலும் தமிழ்நாடு வியக்கத்தக்க இடத்தில்தான் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 706 மருத்துவக் கல்லூரிகளில், 74 கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. இந்தியா முழுவதிலுமுள்ள கல்லூரிகளில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 890 எம்பிபிஎஸ் படிப்பிடங்கள் உள்ளன. இதில் 11,600 மருத்துவப் படிப்பிடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதாவது 10 சதவீதம்.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தேசியத் தர வரிசைப் பட்டியலில் தரமான மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. முதல் 50 கல்லூரிகளில் 8 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.

இந்தியாவின் மருத்துவ தலைநகர் என்ற பெயரும் சென்னைக்கு உண்டு. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் 40 சதவீதம் பேர் சென்னை மருத்துவமனைகளுக்குத்தான் வருகின்றனர்.

இத்தனை சிறப்பு மிக்க மருத்துவக் கட்டமைப்பை கடந்த சில ஆண்டுகளாக அச்சுறுத்தி வருகிறது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு. அது எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே தகுதி மதிப்பெண் என்ற நிலையை மாற்றியது. நீட் தேர்வு மதிப்பெண் மட்டுமே எம்.பி.பி.எஸ் மருத்துவப் பட்டப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் என்று ஆனது.
நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படித்த கிராமப்புற ஏழை எளிய மாணவர்களால் அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.

12ம் வகுப்பில் மிக அதிகமான மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்தவர்களால் கூட நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் போகிறது.

இதனால் மனமுடைந்த பல மாணவர்கள் தங்களின் விலை மதிப்பில்லா உயிரை மாய்த்துக் கொண்டனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல. ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் தேர்வு பல மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளது.

‘கல்வியானது சாதியில் ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக ஏற்றத்தாழ்வு என எல்லாவற்றையும் ஒழித்து, சமத்துவத்தை நிலைநாட்டும்’ என்று நம்பிக் கொண்டிருந்த மாணவச் செல்வங்களுக்கு, அந்தக் கல்வியிலும் ஏற்றத்தாழ்வு உண்டு என்று சொல்லாமல் சொன்னது நீட் தேர்வு.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண விரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 2021 ஜூன் மாதம் ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு மூன்று முக்கியமான அம்சங்களை கண்டறிந்தது.

  1. நீட் தேர்வுக்குப் பின் மருத்துவக் கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
  2. மருத்துவக் கல்வியில் சேரும் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
  3. தனியார் மையங்களில் நீட் தேர்வுப் பயிற்சிக்காக ரூ. 4.5 லட்சம் வரை மாணவர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது.

மேற்கண்ட காரணங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்த குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா 2021 செப்டம்பர் 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் அதை நீண்ட காலம் கிடப்பில் போட்டு வைத்திருந்து, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதற்குப் பிறகு, கடந்த மே மாதம்தான் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். இப்போது குடியரசுத் தலைவருக்கு இந்த மசோதாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

உங்கள் கையெழுத்துக்கும் வலிமை உண்டு

எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையைக் காப்பாற்ற, நீங்கள் ஒவ்வொருவரும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி அனுப்புங்கள்.

உங்களின் கையெழுத்துக்கும் வலிமை உண்டு. உங்களைப்போன்றவர்களின் எண்ணற்ற கையெழுத்துகள் குடியரசுத் தலைவரை நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட வைக்கட்டும். போராட்டங்களின் வழியாகவே தமிழர்கள் பல உரிமைகளை நிலைநாட்டி இருக்கிறார்கள். வரலாறு தொடரட்டும், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு எட்டட்டும் நமது உரிமைக் குரல்.

Exit mobile version