Amazing Tamilnadu – Tamil News Updates

“கோரிக்கை நிறைவேறியதா..?” – அக்கறையுடன் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘முதல்வரின் முகவரித்துறை’யின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களின் கோரிக்கை நிறைவேறியதா என்பதை முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் திட்டம்தான் ‘நீங்கள் நலமா?’

இந்தத் திட்டத்தை, கடந்த 6 ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது சில பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அவர் பேசினார். அதன் தொடர்ச்சியாக, இன்றும் அவர் பயனாளிகள் சிலரைத் தொடர்பு கொண்டு விசாரித்தார். மதுரை, தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். அம்பேத்கர் தொழில்முன்னோடித் திட்டத்தின் மூலம் மருத்துவமனைக்கான உபகரணங்கள் வாங்க கடன் பெற்று, தற்போது சிறப்பாகத் தொழில் செய்து வருகிறார்.

இவரைத் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது விஜய் ஆனந்த், தான் கடன் கோரி விண்ணப்பித்தவுடன் உடனடியாக அது பரிசீலிக்கப்பட்டது என்றும், எவ்வித தடங்கலுமின்றி விரைவாக 5 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றதாகவும் தெரிவித்தார். தற்போது மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்து, அவை அனைத்தும் நல்ல பயன்பாட்டில் உள்ளது என்றும் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.

“சுயமாகத் தொழில் தொடங்கியது குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று முதலமைச்சர் கேட்ட போது, இதுவரை தான் ஒருவருக்கு கீழ் பணியாற்றி வந்ததாகவும், தற்போது தொழில்முனைவோராகி 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது என்றும் விஜய் ஆனந்த் கூறினார். அவருக்கு முதலமைச்சர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அதே போல, மகளிர் சுயஉதவிக்குழுவின் கீழ் பயன் பெற்ற திருக்கோவிலூரைச் சேர்ந்த பானுப்பிரியாவிடம் முதலமைச்சர் பேசினார். வங்கியிலிருந்து அவர் பெற்ற கடன் தொகையை வைத்து, என்ன தொழில் செய்கிறார் என முதலமைச்சர் விசாரித்தார். அப்போது பானுப்பிரியா, வங்கியிலிருந்து கிடைத்த கடன் தொகையைக் கொண்டு தனது அரிசி கடையை விரிவாக்கம் செய்துள்ளதாகவும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சென்னை, வேப்பேரியில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி பயின்று வரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷிணியிடம் பேசினார். பிரியதர்ஷிணி, வியாசர்பாடி-டாக்டர் அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Sc. (Nutrution) பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

விடுதியில் ஏதாவது வசதிகள் தேவை இருந்தால் தெரிவிக்குமாறு கூறிய முதலமைச்சர், விடுதியை அதிகாரிகள் அடிக்கடி வந்து ஆய்வு செய்கிறார்களா என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி, தேவையான எல்லா வசதிகளும் உள்ளது என்றும், மூன்று வேளையும் சரியான நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதாகவும், விடுதி பாதுகாப்பாக இருப்பதாகவும், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் ரூ.1,000/- உதவித்தொகை பெற்று வருவதாக் கூறிய மாணவி பிரியதர்ஷிணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

Exit mobile version