நிலையான சொந்த வரி வருவாய்… ஆற்றல்மிக்க மாநிலமாக திகழும் தமிழகம்!
இந்தியாவின் ஆற்றல்மிக்க பொருளாதார மாநிலங்களில் ஒன்றாகவும் நிலையான வரி வருவாய் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் திகழ்வது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை தரவுகள் மூலமாக தெரியவந்துள்ளது.
‘மாநில நிதி: 2023-24 பட்ஜெட்களின் ஆய்வு’என்ற தலைப்பில் ரிசர்வ் வங்கி ( RBI)வெளியிட்ட தரவுகளின்படி, தமிழகத்தின் ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் (SOTR – State’s own tax revenue) பங்களிப்பு 70%க்கும் மேலாக, நிலையானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 70%
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2015-16 முதல் 2016-17 வரையிலான ஜிஎஸ்டிக்கு முந்தைய காலகட்டத்தில், தமிழ்நாட்டின் மொத்த வரி வருவாயில் 78.8% மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆகும். 2018-19-2019-20 ஆண்டுகளின் ஜிஎஸ்டி-க்குப் பிந்தைய மற்றும் கோவிட்-க்கு முந்தைய காலகட்டத்தில், SOTR இன் பங்கு 79.1% ஆக இருந்தது. கோவிட்க்குப் பிறகு, இது 78.9% ஆக இருந்தது.
SOTR பங்களிப்பை பொறுத்தவரை மாநிலங்களுக்கு இடையே பெரிய வேறுபாடுகளும் காணப்படத்தான் செய்கின்றன. தமிழ்நாடு, ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் 70% க்கும் அதிகமான பங்களிப்பையும், பீகார் மற்றும் ஜார்கண்ட் போன்றவை 50% க்கும் குறைவான பங்களிப்பையும் கொண்ட மாநிலங்களாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.
2016-17 வரை, மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் மிகப்பெரிய அங்கமாக விற்பனை வரி/வாட் இருந்தது. ஆனால், 2017-18 முதல், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST), இதில் மிக முக்கியமான பங்களிப்பாக உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து விற்பனை வரி / வாட், கலால் வரி, முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம் மற்றும் வாகனங்கள் மீதான வரிகள் போன்றவற்றின் பங்களிப்பு இருந்தது. ஜிஎஸ்டி-க்குப் பிந்தைய காலகட்டத்தில், SOTR இன் பங்களிப்பில் பொதுவான அதிகரிப்பு காணப்பட்ட நிலையில், அது மத்திய அரசின் வரி பகிர்வைச் சார்ந்திருப்பதைக் குறைக்க மாநிலங்களுக்கு உதவியது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஏற்பட்ட முன்னேற்றம்
இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முடுக்கிவிடப்பட்ட பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் மற்றும் வரி நிர்வாகத்தின் மேம்பாடு காரணமாக, 2021-22 முதல் மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகரித்ததும் தமிழகத்தின் இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்தது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ பாட்காஸ்ட் தொடரின் முதல் அத்தியாயத்தில் பேசும்போது, 2014 முதல் கடந்த ஆண்டு வரை இந்திய அரசுக்கு தமிழகம் செலுத்திய வரி 5, 16,000 கோடி ரூபாய் என்றும், ஆனால் அதற்கு ஈடாக மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கான வரிப் பகிர்வு நிதியாக கிடைத்தது 2,08,000 கோடி ரூபாய் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டி இருந்தார்.
மேலும், 12 ஆவது நிதிக்குழுவில் தமிழகத்துக்கு கிடைத்த நிதி ஒதுக்கீடு 5.305% ஆக இருந்த நிலையில், 15 ஆவது நிதிக் குழுவில் அது 4.079% ஆகக் குறைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இருந்தார் ஸ்டாலின்.
இத்தகைய சூழ்நிலையிலும், தனது திறமையான நிர்வாகத்தால் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் பங்களிப்பை 70% க்கும் மேலானதாக நிலையானதாக தமிழக அரசு வைத்திருப்பது, தமிழகத்தின் வலுவான நிதி ஆரோக்கியத்தைக் காட்டுவது மட்டுமல்லாமல், பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் திறன்மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்வதையும் உணர்த்துகிறது.