நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்… தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்குமா?
காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லியில் நாளை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்துக்குப் பின்னராவது கர்நாடகா, தமிழ்நாட்டிற்கான தண்ணீரை திறந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9-ம் தேதியன்று, ” காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மத்திய அரசை வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்
பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து கர்நாடகாவில் பல பகுதிகளில் அம்மாநில விவசாய அமைப்பினரும் கன்னட அமைப்பினரும் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், காவிரி பிரச்சனைக்காக தமிழக டெல்டா மாவட்டங்களில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடைபெற்றது.
இந்த நிலையில், தஞ்சையில் விவசாயிகள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தில் இருந்து அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றும், காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் கட்சி தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம் என்றும் தமிழக நீர்வளர்ச்சி துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், “ நாளை நடக்க உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை விடப்படும். கடந்த 18 நாட்களில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நமக்கு 4.21 டி.எம்.சி தண்ணீர் கிடைத்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய சூழ்நிலையில், டெல்லியில் நாளை பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 88-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 16,000 கன அடி வீதம் மொத்தம் 20.75 டி.எம்.சி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
கர்நாடகத்தின் 4 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து , கடந்த 10-ம் தேதி நிலவரப்படி 51 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவித்த அவர்கள், கர்நாடக அணைகளை உத்தரவாதத்துடன் நம்பியிருக்க முடியாது என்று கூறினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள், வருகிற 16-ம் தேதி காலை 8 மணி முதல் 31-ம் தேதி வரை, வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட வேண்டும் என முடிவு செய்து, அதனை கர்நாடக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரைத்தனர்.
இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டத்திற்குப் பின்னராவது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.