2022-23 ஆம் ஆண்டில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு, “இந்த வெற்றிப் பயணம் தொடரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம், மாணவர்களின் தனித்திறமையை அடையாளம் கண்டு, அதற்கேற்ற பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும், வருடத்திற்கு 10 லட்சம் மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சி அளித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பும் பெற்றுத் தரும் நோக்கில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 2022-23ல், 1 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பயின்று வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். அதில், 61 ஆயிரத்து 920 பேர் பொறியியல் படித்தவர்கள். 57 ஆயிரத்து 315 பேர் கலை அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்கள். இந்த மாணவர்கள் காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூசன் இண்டியா பிரைவேட் லிமிடெட், டெக் மகிந்திரா, டிவிஎஸ் குரூப் ஆஃப் கம்பெனிஸ், ஃபாக்ஸ்கான் ஹாய் டெக்னாலஜி, பென்டகன் இண்டியா பிரைவேட் லிமிட்டட், போஸ்ச் குளோபிள் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிட்டட், சதர்லேண்ட் குளோபிள் சொல்யூசன்ஸ் அண்ட் அக்சென்ட்டர் போன்ற பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவருமே கலை அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்கள். அடுத்த இரண்டு மாதங்களில், பிற மாவட்டங்களிலும் இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா கூறுகிறார்.
இந்தச் செய்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தியை தனது எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வெற்றிப் பயணம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
“தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறை பட்டதாரிகள் அனைவரும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே நமது திராவிட மாடலின் நோக்கம். நமது திட்டங்களால் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.