“திராவிட மாடல் அரசின் திட்டங்களே மக்களை நேரில் சந்திக்கும் துணிவைத் தருகிறது!”- மு.க. ஸ்டாலின் பெருமிதம்
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன் ஒரு அம்சமாக எட்டயபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி, இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தனது தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றுக் கொண்ட இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் அனைத்தும் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வைக்கும் திட்டங்கள் என்றும், அந்த துணிச்சலில்தான் மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மனதார வாழ்த்தும் மக்கள்
இது குறித்து பேசிய அவர், “திராவிட மாடல் அரசு என்பது, தமிழ்நாட்டு மக்களின் அரசு! பெருந்தலைவர் காமராசரின் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடும் அரசு! அதன் அடையாளமாகத்தான், பெருந்தலைவர் காமராசர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியதுபோல், காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் வெறும் வயிற்றுடன் இருக்கக் கூடாது என்று, காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சிறிது நாட்களுக்கு முன்னால், எனக்கு ஒரு அஞ்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தால், அதில் 50 கடிதங்களுக்கு மேல் இருந்தது. அனைத்துமே இராமநாதபுரம் மாவட்டம் – சாயல்குடியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் எனக்கு அனுப்பிய கடிதங்கள்.
காலை உணவுத் திட்டத்தால் பசியில்லாமல் தெம்பாக, உற்சாகமாக படிக்க முடிகிறது என்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியதற்கு நன்றி என்றும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்கள். முதலில் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், இப்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டதால் மேலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் வயிறார சாப்பிடுகிறார்கள். பணிச்சுமை குறைந்ததால் பெற்றோரும் மனதார வாழ்த்துகிறார்கள்.
இப்படி, பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் வரை, போற்றும் பல திட்டங்களை நிறைவேற்றுவதுதான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி! கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடையும் வகையில், மிகவும் கவனமாகத் திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
‘ஒரு கோடியே 15 லட்சம் சகோதரிகள் மகிழ்ச்சி“
அதில் முக்கியமானது, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’. எங்கள் தாய்வீட்டுச் சீர் மாதிரி, எங்கள் அண்ணன் ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் தருகிறார் என்று தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் சகோதரிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்!
சமீபத்தில், திருப்பூரில் ஒரு சகோதரி பேசும் வீடியோவைப் பார்த்தேன்… அதில் சொல்கிறார்கள், டெய்லரிங் சென்றுதான் சம்பாதிக்கிறேன்… என்னுடைய வருமானத்தில் ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைத்த மாதிரி இருக்கிறது என்று மகிழ்ச்சியாக கூறினார்… இந்த ஆயிரம் ரூபாய் மளிகை வாங்க, குழந்தைகளுக்கு மருந்து மாத்திரை வாங்க, மாத கடைசியில் சிலிண்டர் வாங்க என்று தங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிகரமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் பேசினார்கள்!
‘விடியல் பயணம் திட்டம்’
இன்னும் இருக்கிறது, நாம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தினமும் லட்சக்கணக்கான மகளிர் சந்தோஷமாக, நாங்கள் ஸ்டாலின் அய்யா பஸ்சில், இலவசமாக பயணம் செய்கிறோம் என்று சொல்லும், ‘விடியல் பயணம் திட்டம்’.
வெளியூரில் வேலைக்குச் செல்லும் மகளிர் தங்குவதற்கு, ’தோழி விடுதி’ என்று ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். இந்த திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயனடைகிறது என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருமையுடன் கூறுவேன்!
திராவிட மாடல் அரசு
நம்முடைய திராவிட மாடல் அரசின் கொள்கை என்ன? “எல்லார்க்கும் எல்லாம்”, “அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி”. அதன் அடிப்படையில், கடந்த மாதம் 24-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நான் வந்து, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ‘வின் ஃபாஸ்ட்‘ நிறுவனத்தின் தொழிற்சாலைக்காக அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தூத்துக்குடி சிப்காட்டில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படவிருக்கும் இந்தத் தொழிற்சாலையால், முதல்கட்டமாக நான்காயிரம் பேருக்கு வேலை கிடைக்கப் போகிறது! தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கப் போகிறது!
இப்படி மக்களுக்கான நலத்திட்டங்களையும் – சாதனைகளையும் ஒவ்வொரு நாளும் செய்த அந்த துணிச்சலுடன்தான் இந்த ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்‘ உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். சும்மா அல்ல, தெம்போடு, துணிச்சலோடு நிற்கிறேன். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நிற்கிறேன்” எனக் கூறினார்.