நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு மு.க. ஸ்டாலின் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், திமுக-வுக்கு சாதகமான கருத்துக்கணிப்புகள் குறித்தும், தமிழ்நாட்டில் திமுக. vs பாஜக. என்பது போன்ற தோற்றம் கட்டமைக்கப்படுவது குறித்தும், ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தியா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் விரிவான விடையளித்துள்ளார்.
அந்த பேட்டியில் இடம்பெற்றுள்ள முக்கிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள பதில்கள் வருமாறு:
சமூகநீதிக் கூட்டமைப்பு எனத் தொடங்கியது முதல், இந்த இந்தியா கூட்டணிக்கான முழு முயற்சியும் எடுத்தது நீங்கள்தான். இந்த முயற்சி முழு வெற்றி பெற்றுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?
ஆமாம்! எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இந்தியா முழுக்கவே பிரிந்து இருப்பதால்தான் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. பாஜக-வை வீழ்த்தக் காங்கிரசையும் உள்ளடக்கிய ஒரு அணியே சரியானது என்பதை வலியுறுத்தி வந்தேன். அதுதான், ‘இந்தியா’ கூட்டணியாக உருப்பெற்றுள்ளது. இந்தியாவை ‘இந்தியா’ கூட்டணி கைப்பற்றி ஆட்சியை அமைக்கும்போதும், அந்த ஆட்சி கூட்டாட்சியாக செயல்படும்போதும் எனது முயற்சி முழு வெற்றியைப் பெறும்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக. கட்சிகளுக்கு விரும்பிய எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்க முடியாததன் காரணம் என்ன?
விரும்பிய எண்ணிக்கையைக் கொடுத்ததால்தான் அவர்கள் விருப்பமுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். எனவே, விரும்பிய தொகுதியை வழங்க முடியவில்லை என்பதே தவறானதாகும்.
காங்கிரஸ், சிபிஎம் மற்றும் மதிமுக-வுக்கு இந்த முறை தொகுதிகளை மாற்றியதற்கு சிறப்புக் காரணம் உள்ளதா?
திமுக போட்டியிட்ட தொகுதிகளும்தான் மாறி இருக்கின்றன. தோழமைக் கட்சிகளுக்கும் அவர்கள் கேட்ட தொகுதிகள், அவர்களுக்கு விருப்பமான தொகுதிகள்தான் தரப்பட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 39 எம்பிக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது. மீண்டும் இதேபோன்ற நிலை உருவானால், உங்கள் வெற்றியின் பலன் எவ்வாறாக இருக்கும்?
மீண்டும் அதே நிலை உருவாகாது. ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளைச் செயல்படுத்திக் காட்டுவோம். கடந்த ஐந்தாண்டு காலத்தில் பாஜக-வுக்கு மிகச் சரியான எதிர்க்கட்சியாகத் திமுக செயல்பட்டுள்ளது. மோடி அரசின் சர்வாதிகாரச் சட்டங்கள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்துள்ளோம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மேற்கொள்ளப்படாத வகையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் மிக முக்கியமான 3 சாதனைகள் என்று எதைப் பெருமையாக கூறுவீர்கள்?
பேருந்துகளில் மகளிருக்கான விடியல் பயணம் திட்டம்,மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.
இந்த மூன்றும் இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றுகின்ற திராவிட மாடல் அரசின் முத்தான மூன்று சாதனைத் திட்டங்கள். இத்துடன் சாதனைகள் நிறைவடைந்துவிடவில்லை. நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, இன்னுயிர் காப்போம், முதல்வரின் முகவரி, முதலீட்டாளர்களின் முதல் முகவரி எனக் கல்வி – மருத்துவம் – தொழில் – கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சாதனைத் திட்டங்கள் நிறைய உள்ளன.
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்குச் சாதகமாக இருப்பதாக வெளியாகும் நிலையில், வெற்றி வசமானால் உங்களிடம் இருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
வெற்றியை மக்கள் எங்களுக்கு முழுமையாக வழங்குவார்கள். நாங்கள் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மாற்றுக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் செய்கின்றனர். இதை மாற்ற என்ன முயற்சி எடுப்பீர்கள்?
ஆளுநர் என்பது நியமனப் பதவியே தவிர, அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பதவி கிடையாது. ஆளுநர்களை நியமிக்கும்போது மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெற்று நியமித்திடப் புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், மாநில ஆளுநர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆளுநர் சட்டநடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேற்றும்போது ஆளுநர்களின் அதிகார அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தமிழ்நாட்டில் இரண்டு திராவிடக் கட்சிகள் தவிர வேறுகட்சிகள் காலூன்றிவிடக் கூடாது என அதிமுக-வின் பழனிசாமியுடன் நீங்கள் கைகோத்துச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறதே?
பழனிசாமியின் கட்சியை நாங்கள் திராவிடக் கட்சியாக நினைப்பது இல்லை. அவர்களுக்கும் திராவிடக் கொள்கைக்கும் தொடர்பு இல்லை. பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர்களுக்கும் கூட எந்த தொடர்பும் இல்லை. இந்தக் கொள்கைக்கு எதிராகக் கட்சி நடத்துவதுதான் அந்தக் கூட்டம். எனவே, அவர்களோடு கை கோத்துள்ளோம் என்பது மிகத் தவறான குற்றச்சாட்டு!
தமிழ்நாடு என்பது பெரியார் மண்! சமூகநீதி மண்! தமிழன் என்ற இன உணர்வோடு மக்கள் ஒற்றுமையாக வாழும் மண்! இங்கு மக்களைப் பிளவுபடுத்தும் மதவாதம் ஒருபோதும் முளைக்காது. இதனை பா.ஜ.க. முதலில் உணரவேண்டும். என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியவில்லையே என்ற வேதனையோடு இந்த அவதூறு கிளப்பப்படுகிறது. பருத்தி விளையும் மண்ணில் பேரிக்காய் விளையாது என்பதை பா.ஜ.க. முதலில் உணர்ந்து திருந்த வேண்டும்.