திமுக-வுக்கு 2004 வரலாறு திரும்புமா..? – மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணமும் தமிழகத்தின் எதிர்பார்ப்பும்!

நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவரும் நிலையில், அக்கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் வருகிற ஜூன் 1 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார். எப்படியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே 13 ஆவது நாடாளுமன்ற மக்களவையைக் கலைக்க பரிந்துரைத்து, வாஜ்பாய் ஆட்சியால் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்துடன் தேர்தலை சந்திக்கத் துணிந்தது பாஜக கூட்டணி.

வாஜ்பாய் அரசும் 2004 தேர்தலும்

வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்னதாகவே, 2004 பிப்ரவரி 6 அன்று அப்போதைய ஜனாதிபதி கலாம் 13 ஆவது மக்களவையைக் கலைத்தார். இது திட்டமிடப்பட்ட மாதங்களுக்கு முன்பே மக்களவைத் தேர்தலுக்கு வழி வகுத்தது. முன்கூட்டியே கலைக்கப்பட்டால், அது தேர்தல் ஆணையம் (EC) சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதை பாதிக்கும் என்ற கவலை எழுந்தது. இருப்பினும், அதே மாதத்தில் தேர்தல் ஆணையம் அட்டவணையை அறிவித்தாலும், அது ஏப்ரல் மாதத்திற்குள் அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் விருப்பத்துடன் ஒத்துப்போகவில்லை. இப்போது இருப்பது போன்று அல்லாமல், அப்போது தேர்தல் ஆணையம் ஓரளவு சுதந்திரமாக செயல்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

எடுபடாமல் போன பாஜக பிரசாரம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில், பாஜக மெகா ஊடக பிரசாரங்களை மேற்கொண்டது. இப்போது இருப்பதைப் போன்று அன்றைய நாட்களில் எல்லோரது கைகளிலும் மொபைல் போன்கள் கிடையாது. மேலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களும் மக்களிடையே ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனாலும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சாலையோர விளம்பர போர்டுகள் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாஜக-வின் ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரசாரம் பார்ப்பவர்களைத் திணறடித்தது. பாஜக தலைமையிலான அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக உடனும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடனும் வலுவான கூட்டணியை அமைத்திருந்தது.

காங்கிரஸின் “ஆம் ஆத்மி’ பிரசாரம்

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை வேறாக இருந்தது. அது பாஜக-வின் பிரசாரத்துக்கு எதிர்வினை ஆற்றும் உத்தியைக் கடைப்பிடித்தது. வாஜ்பாய் அரசாங்கக் கொள்கைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதில் அதன் தோல்வி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியது. மேலும் பாஜக-வின் ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரசாரத்துக்கு எதிராக ‘ சாமான்ய மக்களுடன் ( ஆம் ஆத்மி ) காங்கிரஸின் கை’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்தது.

மேலும் பாஜக-வின் ‘மக்களிடையே நிம்மதி உணர்வு’ என்ற பிரசாரத்துக்குப் பதிலடியாக, சமூகத்தின் உயரடுக்கு மற்றும் பெரும் வணிக முதலாளிகளுக்கு மட்டுமே ‘நிம்மதி உணர்வு’ என விமர்சித்தது காங்கிரஸ். இது தற்போதைய மோடி அரசு அம்பானி, அதானிகளுக்கு மட்டுமே சாதமாக இருப்பதாக காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டை நினைவூட்டுவதாகவே உள்ளது. மொத்தத்தில் இப்போது போன்றே அப்போதும், காங்கிரஸ் தன்னை ஏழைகளுடன் வெற்றிகரமாக அடையாளப்படுத்திக் கொண்டதோடு, பாஜக-வை பணக்காரர்களின் கட்சி என விமர்சித்தது.

இந்த பிரசார உத்தி நன்றாகவே எடுபட்ட நிலையில், பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன்சக்தி, பாமக, மதிமுக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மக்கள் ஜனநாயாக கட்சி உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற அணியை உருவாக்கி, அதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயருடன் தேர்தலை சந்தித்தது.

ஆட்சியைப் பிடித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி

இந்த நிலையில்தான், பாஜக கூட்டணி எப்படியும் 300 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற அரசியல் ஆருடங்களையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, 2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 335 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது. இதில் காங்கிரஸ் கட்சி 148 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க, அதன் கூட்டணி கட்சிகளான மாநிலத்தில் வலுவாக இருந்த திமுக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் மொத்தம் பதிவான வாக்குகளில் 37 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன. இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. பிரதமராக காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக-வுக்கு 138 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

வலுவாக கோலோச்சிய திமுக

இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அபார வெற்றிபெற்றது திமுக தலைமையிலான கூட்டணி. திமுக 16 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற, கூட்டணியில் இடம்பெற்ற பாமக 5, மதிமுக 4 மற்றும் கம்யூனிஸ் கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதாவது 40 / 40 என வென்றது.

இதனையடுத்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், பிரதமராக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மாநில கட்சிகளுக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் திமுக-வுக்கு 7 அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டன. இதில் தயாநிதி மாறன், டி.ஆர் பாலு, ஆ.ராசா உள்ளிட்டோருக்கு வலுவான கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. சுப்புலெட்சுமி ஜெகதீசன், எஸ்.எஸ். பழனி மாணிக்கம், எஸ். ரகுபதி, வெங்கடபதி ஆகியோருக்கு இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. பாமக-வில் அன்புமணி ராமதாஸ் சுகாதாரத் துறை அமைச்சரானார். இதனால் அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் திமுக-வின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது.

இதனால் தமிழகத்துக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அப்படிதான் தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திர திட்டத்தைச் செயல்படுத்த மன்மோகன் சிங் அரசு ஒப்புதல் கொடுத்து, அதனை அவரே தொடங்கி வைத்து பணிகளும் தொடங்கின. ஆனால், ராமர் பாலம் இடிக்கப்பட்டு விடும் எனக் கூறி, அதை எதிர்த்து சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோரால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் அத்திட்டம் அப்படியே முடங்கிப்போனது. அதே சமயம், வேறு பல திட்டங்கள் தமிழகத்துக்கு வந்தன.

2004 வரலாறு திரும்புமா?

இந்த நிலையில்தான், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 அன்று நடைபெற உள்ள நிலையில், இதுவரை நடந்த 6 கட்ட வாக்குப்பதிவை வைத்து எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில்கொண்டு, காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா கூட்டணி’ தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ‘இந்தியா கூட்டணி’ நாடாளுமன்ற தேர்தலில் செயல்பட்ட விதம், தேர்தல் முடிவுக்கு பிறகு ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூன் 1-ஆம் தேதி காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஏறக்குறைய அனைத்து இடங்களையும் கைப்பற்றும் எனக்கூறப்படுவதால், 2004 வரலாறு மீண்டும் திரும்புமா, மத்திய ஆட்சியில் திமுக-வுக்கு கிடைக்கும் செல்வாக்கால், இதுவரை மோடி அரசால் ஓரம்கட்டப்பட்ட தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வந்து சேருமா என்ற எதிர்பார்ப்பு திமுக-வினரிடத்தில் மட்டுமல்லாது தமிழக மக்களிடையேயும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seine saint denis : une alerte enlèvement déclenchée pour retrouver un nourrisson de 17 jours. But іѕ іt juѕt an асt ?. Hest blå tunge.