நாடாளுமன்ற தேர்தல் 2024 : ‘பூத் சிலிப்’ கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நாட்டின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 இடங்களுக்கான வாக்குப்பதிவு, நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் சிரமமின்றியும் கால தாமதமின்றியும் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக 68, 321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
அடையாள அட்டை / ஆவணம்
வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஆவணங்களை அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட
மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி பான்கார்டு , தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட் , ஓய்வூதிய ஆவணம், பொதுத்துறை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
பூத் சிலிப் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை வைத்து வாக்களிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும்தான் வாக்களிக்க
முடியும். எனவே பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று யாரும் கவலைப்பட வேண்டாம். வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் இல்லை.
பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொபைல் போனில் இருந்து 1950 என்ற எண்ணில் விவரங்களைப் பதிவு
செய்தால், எந்த வாக்குச் சாவடியில் உங்கள் பெயர் உள்ளது, பாகம் எண் என்ன என்பது முதற்கொண்டு அனைத்து விவரங்களும் கிடைத்துவிடும். வாக்காளர்
அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தாலும் அனைத்து விவரங்களும் வந்து விடுகிறது.
பூத் சிலிப் கட்டாயமில்லை
எனவே பூத் சிலிப் என்பது கூடுதல் உதவிதான்; அது கட்டாயமில்லை. வாக்களிக்க செல்லும்போது, வாக்குச் சாவடி வாசல் அருகே உதவி மையம் அமைக்கப்பட்டு இருக்கும். அங்கிருக்கும் தன்னார்வலர்கள் வாக்காளர்களுக்கு வழி காட்டுவார்கள் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.