நாகை டு இலங்கை… த்ரிலிங் பயணத்தை தொடங்கிய ‘சிரியா பாணி’!
நீண்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஒருவழியாக இன்று தொடங்கியது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட “சிரியா பாணி” என்ற கப்பல்தான் இந்த பயணிகள் சேவை கப்பலாக இயங்கத் தொடங்கி உள்ளது. 150 பயணிகள் பயணிக்கும் வகையில் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ள இந்த கப்பலின் சோதனை ஓட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 10-ம் தேதியன்றே இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் இன்று நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக இந்த கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார்.ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
டிக்கெட் முன் பதிவு செய்வது எப்படி?
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 டிக்கெட் ( ரூ.6500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.7670) விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனை www.kpvs.in. என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இலங்கையின் இணையதளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.
வசதிகள் என்னென்ன?
இந்தப் பயணிகள் கப்பல் ஒரு மணிநேரத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
நாகப்பட்டினத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கையின் காங்கேசன்துறையை இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும். இந்த பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.
இந்த கப்பல் தினமும் காலை 7 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு, பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தை அடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகபட்டினம் வந்தடையும்.
இதில் பயணிகளுக்குத் தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோக குளுகுளு ஏ.சி. வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள கப்பலில் பொழுதுபோக்கிற்காக 6 தொலைக்காட்சிப் பெட்டிகள் தமிழ், ஆங்கிலம், மற்ற மொழியினருக்கு தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோக ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆபத்துக் காலங்களில் உயிர் காக்கும்
மிதவை படகுகள், மருத்துவ உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் அனைத்தும் உள்ளன.
இந்தப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 10 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. அதன்பின் வட கிழக்கு பருவமழை காலம் என்பதால் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகலாம் என்பதால், சில மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மார்ச் மாதம் முதல் தினமும் போக்குவரத்துத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் உற்சாகத்தையும் புதிய இடங்களையும் தேடும் பயண ஆர்வலராக இருந்தால், உங்களுக்கு இந்த கப்பல் பயணம் நிச்சயம் மறக்க முடியாத அனுபவங்களைத் தரும்.