நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?
நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர் எதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து அஜித்தின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அஜித் தற்போது, இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பிய அஜித், சமீபத்தில் தனது மகனின் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அஜர் பைஜானில் விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, உடல் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். வழக்கமாக அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதாக இருந்தால், அதற்கு முன்னதாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.
அதன்படி அப்பல்லோ மருத்துவமனையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது, அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது. அதனைக் கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை சுமார் 30 நிமிடங்களில் சரி செய்து அகற்றியதாகவும், சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
அதே சமயம், அஜித்துக்கு மூளையில் கட்டி என்றும், அதனால்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால், அவரது ரசிகர்கள் இது குறித்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், அஜித்துக்கு மூளையில் கட்டி எதுவும் இல்லை என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்ற அஜித்குமார், முழு உடல் பரிசோதனை செய்துக் கொண்டார். அப்போது, காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பு வீக்கம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதற்காக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, நேற்று இரவே அவரை சாதாரண வார்டுக்கு மாற்றிவிட்டனர்.
சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் உள்ளார். ஆனால், மூளையில் கட்டி என்பதில் உண்மை இல்லை. அனைத்துத் மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று இரவு அல்லது நாளை அஜித்குமார் வீடு திரும்புவார். திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர் பைஜானில் நடக்கும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பங்கேற்பார்” என்றார்.