Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

தொல்லியல் படிக்க ஆர்வமா?

மிழ்நாட்டில் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய 7 இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் அரிய வகை பொருட்கள் கிடைத்துள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்தது என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் இந்த அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு விபரங்கள் நமக்குக் கிடைக்கக் காரணம்
தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வாளர்கள் தான். நீங்களும் அப்படி ஒரு ஆய்வாளராக வேண்டுமா? அதற்கான வாய்ப்பை சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்குகிறது.

ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பை 2024 ஜனவரி மாதம் முதல் இந்த நிறுவனம் தொடங்குகிறது.

இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும்.

இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் (முழுநேரம்) நேரடியாக ஓராண்டு காலம் நடைபெறும்.

இதற்கான விண்ணப்பத்தை  www.ulakaththamizh.in என்ற வலைத்தளத்தில் பெறலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் இந்தப் படிப்பில் சேரலாம். வயது வரம்பு கிடையாது. 

விண்ணப்பக் கட்டணம் ரூ.100 , சேர்க்கைக் கட்டணமாக ரூ.3000, அடையாள அட்டைக்கு ரூ.100 என மொத்தம் ரூ.3200/- செலுத்த வேண்டும். கட்டணத்தை The DIRECTOR, International Institute of Tamil Studies எனும் பெயரில் வங்கி வரைவோலையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும் அல்லது நேரடியாக நிறுவன அலுவலகத்தில் பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2023 டிசம்பர் 29ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும். வகுப்புகள் தொடங்கும் நாள், நேரம் போன்ற விவரங்கள் நிறுவன வலைதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

மேலும் தகவல்களுக்கு, வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 

மாலை 5 மணி வரை 044-22542992, 9500012272 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளோர் இந்த வகுப்பில் சேர்ந்து படித்து பயன் பெறலாம்.

Exit mobile version